அமெரிக்காவில் தொடக்கப்பள்ளியில் துப்பாக்கிச் சூடு - 19 குழந்தைகள் உயிரிழப்பு

அமெரிக்காவில் தொடக்கப்பள்ளியில் துப்பாக்கிச் சூடு - 19 குழந்தைகள் உயிரிழப்பு

அமெரிக்காவில் தொடக்கப்பள்ளியில் துப்பாக்கிச் சூடு - 19 குழந்தைகள் உயிரிழப்பு
Published on

அமெரிக்காவில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 19 குழந்தைகள் உள்பட 21 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள உவால்டேயில் ரோப் என்ற தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றன. இந்நிலையில், நேற்று காலை 11.30 மணியளவில் இளைஞர் ஒருவர் அந்தப் பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்தார். அவரை அங்கிருந்த பாதுகாவலர்கள் துரத்தி வந்தனர். அப்போது திடீரென ஒரு வகுப்பறைக்குள் நுழைந்த அந்த இளைஞர், தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து குழந்தைகளை நோக்கி சுடத் தொடங்கினார்.

இதில் 19 குழந்தைகள், 2 ஆசிரியைகள் என 21 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டு அருகில் உள்ள காவல் நிலையத்தில் இருந்த போலீஸார் உடனடியாக அங்கு சென்று, அந்த இளைஞரை சுற்றி வளைத்தனர். ஆனால், போலீஸாரை நோக்கியும் அந்த இளைஞர் துப்பாக்கியால் சுட்டார். இதனால் போலீஸார் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் அந்த இளைஞர் உயிரிழந்தார். துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காயமடைந்த 15-க்கும் மேற்பட்ட குழந்தைகளை போலீஸார் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பள்ளிக் குழந்தைகள் சுட்டுக்கொல்லப்பட்ட நிகழ்வு, அமெரிக்காவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே போலீஸார் நடத்திய விசாரணையில், துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் 18 வயது நிரம்பிய இளைஞர் என்றும், இப்பள்ளிக்கு வருவதற்கு முன்னதாக தனது பாட்டியை அவர் துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்தியதும் தெரியவந்தது. அவரது பின்னணி குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிபர் கண்டனம்

இந்நிலையில், இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, தேசியக் கோடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு உத்தரவிட்டுள்ளார்.

தொடரும் கொடூரம்

அமெரிக்காவில் நாளுக்கு நாள் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, அமெரிக்காவில் நடப்பாண்டு மட்டும் 215 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அதிலும், பள்ளிகளில் நடக்கும் 27-வது துப்பாக்கிச் சூடு சம்பவம் இதுவாகும். அடுத்தடுத்து அரங்கேறும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களால் அமெரிக்க மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கடந்த 2012-ம் ஆண்டு இதே போல ஒரு பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், 20 குழந்தைகள் உட்பட 26பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com