லாஸ்வேகாஸ் தாக்குதல்: குற்றவாளி வீட்டில் குவியல், குவியலாக ஆயுதங்கள் பறிமுதல்
லாஸ்வேகாஸில் கொலைவெறித் தாக்குதல் நடத்திய குற்றவாளி ஸ்டீஃபன் பெடாக்கின் வீட்டில் இருந்து குவியல், குவியலாக ஆயுதங்களை பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
அமெரிக்காவின் மிக முக்கியமான கேளிக்கை நகரமாகவும், சுற்றுலாத் தலமாக விளங்குவது லாஸ்வேகாஸ். அப்பகுதியில் இசை நிகழ்ச்சிக்காக ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். கொண்டாட்டங்கள் நிறைந்திருந்த நேரத்தில், அங்குள்ள விடுதியின் 32வது தளத்தில் இருந்து ஆயுதமேந்திய நபர் ஒருவர், மக்களை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினார். இந்த சம்பவத்தில் 59 பேர் உயிரிழந்தனர். 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இத்தாக்குதல் தொடர்பாக எஃப்.பி.ஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ள நிலையில், துப்பாக்கிச் சூட்டிற்கும், பயங்கரவாத அமைப்புகளுக்கும் தொடர்பில்லை என அமெரிக்காவின் எஃப்.பி.ஐ மறுப்பு தெரிவித்துள்ளது. தாக்குதலில் ஈடுபட்டது, ஸ்டீஃபன் பெடாக் என்ற 64 வயது முதியவர் என தெரியவந்துள்ளது.
நெவதாவின் மெஸ்கொயிட் என்ற பகுதியில் உள்ள ஸ்டீஃபன் பெடாக் வீட்டில் நடத்திய சோதனையில் கூடுதலாக 18 துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், ஏராளமான துப்பாக்கித் தோட்டாக்கள், சில மின்னணு சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நெவதாவின் வடக்குப் பகுதியில் இருக்கும் பெடாக்கின் மற்றொரு வீட்டிலும் பாதுகாப்புப் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். அவரது காரில் இருந்து அம்மோனியா நைட்ரேட் என்ற ஒரு வகையான உரத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.