\
Tamil And Muslim Six Parties Forge New Bloc in Sri Lanka
இலங்கைஎக்ஸ் தளம்

இலங்கை | தமிழர் அரசியல் வரலாற்றில் முக்கிய திருப்பம்.. 6 தமிழ் - முஸ்லிம் கட்சிகள் புதிய கூட்டணி!

இந்த புதிய கூட்டணி நாட்டின் இறையாண்மைக்கு உட்பட்டே தங்களின் உரிமைகளைக் கோருவதாகவும், இனரீதியாக நாட்டைப் பிரிக்கும் எந்தவொரு பிரிவினைவாதக் கொள்கையும் தங்களுக்கு இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
Published on

இலங்கைத் தமிழர்களின் அரசியல் வரலாற்றில் முக்கிய திருப்பமாக, வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளைச் சேர்ந்த 6 முக்கிய தமிழ் - முஸ்லிம் அரசியல் கட்சிகள் இணைந்து புதிய கூட்டணியை அமைத்துள்ளன. கொழும்பில் நடைபெற்ற சந்திப்பைஅடுத்து இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சி (ITAK) - (வடக்கு, கிழக்கு தமிழர்கள்), ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணி (DTNA) - (வடக்கு, கிழக்கு தமிழர்கள்), தமிழ் முற்போக்குக் கூட்டணி (TPA) - (மலையகத் தமிழர்கள்), இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் (CWC) - (மலையகத் தமிழர்கள்), ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) - (முஸ்லிம் சமூகம்), அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) - (முஸ்லிம் சமூகம்) உள்ளிட்ட சிறுபான்மையின அரசியல் கட்சிகள் மற்றும் கூட்டணிகள் ஒன்றிணைந்து ஒரு புதிய கூட்டணியை அமைத்துள்ளன. பாரம்பரிய தமிழ்-முஸ்லிம் கட்சிகள் தங்களின் உரிமைகளுக்காகப் பிரிந்து நிற்காமல் ஒற்றைக் குரலாக ஒலிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்த முடிவை எடுத்துள்ளன.

இது தேர்தல் கால கூட்டணியாக இல்லாமல், இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் கால் பகுதிக்கும் அதிகமாக உள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மை மக்களின் நில அபகரிப்புப் பிரச்னைகள், புதிய அரசியலமைப்பு மற்றும் மாகாண சபை தேர்தல் ஆகியவற்றுக்கு ஒன்றிணைந்து தீர்வு காண்பதே கூட்டணியின் முக்கிய நோக்கம் என அக்கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த புதிய கூட்டணி நாட்டின் இறையாண்மைக்கு உட்பட்டே தங்களின் உரிமைகளைக் கோருவதாகவும், இனரீதியாக நாட்டைப் பிரிக்கும் எந்தவொரு பிரிவினைவாதக் கொள்கையும் தங்களுக்கு இல்லை எனவும் தெரிவித்துள்ளனர். மேலும், தற்போதைய அதிபர் அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (NPP) அரசு, தனது தேர்தல் அறிக்கையில் சிறுபான்மையின மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என இக்கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com