பொழுது போக்கு பூங்காக்களுக்கு ஆண்களும் பெண்களும் ஒன்றாக செல்ல தடை-தலிபான்கள் அதிரடி
ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசாங்கம் ஆண்களும், பெண்களும் ஒரே நாளில் பொழுதுபோக்கு பூங்காக்களுக்குச் செல்வதைத் தடைசெய்துள்ளது. பூங்காக்களுக்கு செல்ல வாரத்தின் குறிப்பிட்ட நாட்களை ஆண்களுக்கும், குறிப்பிட்ட நாட்களை பெண்களுக்கும் ஒதுக்கியுள்ளது
கடந்த மாதம், தலிபான் உறுப்பினர்கள் ஆயுதங்கள், இராணுவ ஆடை மற்றும் அடையாளங்களுடன் பொழுதுபோக்கு பூங்காவிற்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. அதற்கு முன்னதாக ஆப்கானிஸ்தான் நிர்வாகம், ஆண் உறவினர்கள் உடன் இல்லாவிட்டால் பெண்கள் விமானங்களில் ஏற அனுமதிக்க வேண்டாம் என நாட்டில் உள்ள விமான நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது.
ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தை கைப்பற்றிய பிறகு, தலிபான்கள் பல்வேறு பகுதிகளில் பிரிவினைகளை தொடர்ந்து அமல்படுத்துகின்றனர். தற்போது ஆண்கள் மற்றும் பெண்கள் ஒன்றாக பூங்காக்களுக்கு செல்ல தடை விதித்துள்ள அரசு, புதன் மற்றும் சனிக்கிழமையன்று ஆண்களும், மற்ற நாட்களில் பெண்களும் பூங்காவிற்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளது.
தலிபான் தலைமையிலான அரசாங்கம் இன்னும் சர்வதேச அங்கீகாரத்தைப் பெறாத நிலையில், ஆப்கானிஸ்தான் மக்களுக்கு அவர்கள் அளித்த வாக்குறுதிகளை அவர்கள் மீறுவதாக பலர் குற்றம் சாட்டியுள்ளனர். தற்போது 6ம் வகுப்புக்கு மேல் உள்ள சிறுமிகளுக்கான பள்ளிக்கூடத்தையும் தலிபான் அரசு திறக்கவில்லை பெரும் சர்ச்சையாகியுள்ளது.