திறக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே மாணவிகளுக்கான பள்ளிகள் மூடல்

திறக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே மாணவிகளுக்கான பள்ளிகள் மூடல்
திறக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே மாணவிகளுக்கான பள்ளிகள் மூடல்

(கோப்பு புகைப்படம்)

ஆப்கானிஸ்தானில் மாணவிகளுக்கான மேல்நிலைப்பள்ளிகள் திறக்கப்பட்ட சில மணி நேரங்களில், தாலிபான்கள் உத்தரவை அடுத்து மாணவிகள் வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் அமெரிக்க துருப்புகள் வெளியேறியதை அடுத்து தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினர். பின்னர் பெண்கள் கல்வி கற்கும் உரிமைகள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தனர். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் பொறுப்பேற்றபோது கொரோனா தொற்று நோய் காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. இரண்டு மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட போதிலும் சிறுவர்கள் மற்றும் 12 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகள் மட்டுமே பள்ளிகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். 12 வயதுக்கு மேல் உள்ள மாணவிகள் பள்ளி செல்ல தாலிபான்கள் அனுமதி வழங்கவில்லை.

இந்நிலையில் தற்போது ஏழு மாதங்களுக்கு பிறகு ஆப்கானிஸ்தான் முழுவதும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் மாணவிகள் கல்வி பயில கடந்த வாரம் தாலிபான்கள் அனுமதி வழங்கி இருந்தனர். இன்று 12-19 வயதுடைய பல்லாயிரக்கணக்கான மாணவிகள் பள்ளிக்குத் திரும்ப உள்ளதாக கூறப்பட்டது. அதன்படி இன்று தலைநகர் காபூல் உட்பட பல மாகாணங்களில் மாணவிகள் பயிலும் மேல்நிலைப்பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. ஆனால் திடீரென பள்ளிகள் திறக்கப்பட்ட சில மணி நேரங்களில் மாணவிகள் வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். தாலிபான்கள் உத்தரவின் பெயரில் மாணவிகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

காபூலில் உள்ள ஓம்ரா கான் பெண்கள் பள்ளியின் ஆசிரியர் பல்வாஷா கூறுகையில், “எனது மாணவர்கள் அழுவதையும், வகுப்புகளை விட்டு வெளியேற தயங்குவதையும் நான் காண்கிறேன்” என்று கூறினார். “எங்கள் எதிர்காலம் என்னவாகும்?” என்று ஒரு பள்ளி மாணவி கேள்வி எழுப்பியபடி பள்ளியிலிருந்து வேதனையுடன் வெளியேறினார். இது குறித்து ஆப்கானிஸ்தான் கல்வி அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அஜீஸ் அஹ்மத் ரேயான் கூறுகையில், "இது குறித்து கருத்து தெரிவிக்க எங்களுக்கு அனுமதி இல்லை" என முடித்துக் கொண்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com