மலைமீது ஏறி போட்டோ எடுக்கும் பெண் - பள்ளத்தில் விழுந்து பரிதாப பலி

மலைமீது ஏறி போட்டோ எடுக்கும் பெண் - பள்ளத்தில் விழுந்து பரிதாப பலி
மலைமீது ஏறி போட்டோ எடுக்கும் பெண் - பள்ளத்தில் விழுந்து பரிதாப பலி

மலைமீது ஏறி நீச்சல் உடையுடன் போட்டொ எடுக்கும் பெண் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் தைவானில் நிகழ்ந்துள்ளது.

தைவான் நாட்டின் நியூ தைபெய் நகரத்தைச் சேர்ந்த பெண் கிகி வூ (36). கவர்ச்சி மாடலான இந்தப் பெண், தன்னைப் போன்ற மாடல்கள் மத்தியில் தனித்துவம் பெற்று விளங்க வேண்டும் என்ற எண்ணத்தில் விநோத பழக்கம் ஒன்றை பின்பற்றி வந்துள்ளார். மலைமீது ஏறி அங்கு நீச்சல் உடையில் புகைப்படங்களை எடுத்து, சமூக வலைத்தளங்களில் பதிவிடும் விநோத பழக்கம் இருவருக்கு இருந்துள்ளது. மலைமீது ஏறும் போது மலையேற்ற உடையுடன் ஏறும் இப்பெண், மலையின் உச்சிக்கு சென்றதும் அங்கு நீச்சல் உடையை அணிந்துக் கொண்டு புகைப்படம் எடுப்பதை வழக்கமாக வைத்திருந்துள்ளார்.

இவ்வாறு சுமார் 100க்கு மேற்பட்ட மலைக்குன்றுகள் மீது ஏறி அவர் புகைப்படங்களை எடுத்துள்ளார். அந்தப் புகைப்படங்களை அவர் சமூக வலைத்தளங்களில் பதிவிடும் போது, அதிக லைக்குகள் குவிந்துள்ளன. இதனால் ஆர்வமடைந்த வூ தொடர்ந்து புகைப்படங்களை எடுக்க மலைகள் மீது ஏறுவதை வாடிக்கையாக்கியுள்ளார். ஆனால் அதிலிருக்கும் ஆபத்தை அவர் முற்றிலும் அலட்சியப்படுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் வழக்கம்போல் புகைப்படம் எடுப்பதற்காக கடந்த சனிக்கிழமை தைவானில் உள்ள யுஷான் தேசியப் பூங்காவின் மலைக்குன்றின் மீது ஏறிய வூ, எதிர்பாராத விதமாக தவறி பள்ளத்தில் விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவர், தன்னுடைய சாட்டிலைட் போன் மூலம் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

நண்பர்கள் உடனே காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர் மற்றும் பாதுகாப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப்படையினர் வூவை தேடியுள்ளனர். இரண்டு நாட்களாக தேடியும் அவர் கிடைக்கவில்லை. மோசமான வானிலை காரணமாக அவரை கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலை அவரது இறந்த உடலை மீட்புப் படையினர் கண்டுபிடித்தனர். சுமார் 100 அடி பள்ளத்தில் உடல் கிடந்ததால் அதனை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டு, நீண்ட போராட்டத்திற்குப் பின் இன்று உடலை மீட்டுள்ளனர். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com