டால்பின் வேட்டைக்காரர்களால் ரத்தக் காடான ஜப்பான் கடல் பகுதி

டால்பின் வேட்டைக்காரர்களால் ரத்தக் காடான ஜப்பான் கடல் பகுதி

டால்பின் வேட்டைக்காரர்களால் ரத்தக் காடான ஜப்பான் கடல் பகுதி
Published on

கடும் எதிர்ப்புகளையும் மீறி ஜப்பான் நாட்டில் டால்பின் வேட்டை மீண்டும் தொடங்கி உள்ளது.

டால்பின்கள் வேட்டையாடப்படுவது தொடர்பாக 2009-ல் வெளியான THE COVE என்ற ஆவணப்படம் ஆஸ்கர் விருது பெற்ற படமாகும். டால்பின் வேட்டை குறித்த புலன் விசாரணை போன்று அமைந்திருந்த இப்படம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது. இதனையடுத்து டால்பின் வேட்டைக்கு உலக அளவில் பெரிதும் எதிர்ப்புகள் கிளம்பின.

ஆனாலும், ஜப்பான் நாட்டில் டால்பின் வேட்டை தொடர்கதையாகவே இருந்து வருகிறது. அங்குள்ள கடல்பகுதியில் அமைந்துள்ள தைஜி என்ற இடத்தில், மீண்டும் வேட்டையைத் தொடங்கியுள்ளது ஜப்பான். டால்பின்கள் எவ்வாறு வேட்டையாடப்படுகின்றன என்பது தொடர்பான வரைகலையை சுற்றுச்சூழல் அமைப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, தைஜி பகுதியில் இடம்பெயரும் டால்பின்கள் அங்கு அமைந்திருக்கும் மலைக்குகைப் பகுதிக்கு விரட்டப்படுகின்றன.

கூட்டமாக வரும் டால்பின்கள் அங்கு கட்டப்பட்டிருக்கும் மிதவை போன்ற கயிற்றில் சிக்கிக் கொள்கின்றன. பிறகு படகுகளில் வரும் மீனவர்கள், டால்பின்களின் கண்களுக்கு அருகில் ஈட்டியால் குத்துகின்றனர். இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டோ அல்லது கடலுக்குள் மூழ்கியோ அவை உயிரிழக்கின்றன. டால்பின்கள் இவ்வாறு உயிரிழக்க 30 நிமிடம் வரைப் பிடிக்கும் என்று கூறப்படுகின்றது.

இதுபோன்று கொடூரமான முறையில் டால்பின்கள் வேட்டையாடப்படுவதால்தான் இதற்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது. இத்தகைய சர்ச்சைகளையும் எதிர்ப்புகளையும் மீறி, ஜப்பானின் தைஜி பகுதியில் செப்டம்பர் முதல் நாளன்று டால்பின்கள் வேட்டையை ஜப்பான் தொடங்கியுள்ளது. சுமார் ஆறு மாதங்களுக்கு இது நீடிக்கும் என்று கூறப்படுகின்றது. முதல் நாளன்று டால்பின் எதுவும் கிடைக்காமல் படகுகள் கரை திரும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும் இரண்டாவது நாளன்று ஐந்து டால்பின்கள் பிடிபட்டதாக ஜப்பான் ஊடகங்கள் கூறியுள்ளன.

இறைச்சிக்காகவும், மிருகக் காட்சி சாலைகளில் காட்சிப்படுத்துவதற்காகவும் டால்பின்கள் கொடூரமான முறையில் வேட்டையாடப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் தைஜி பகுதியில் 2 ஆயிரம் டால்பின்கள் வேட்டையாடப்படுகிறது.

டால்பின், திமிங்கலத்தை வேட்டையாடுவது சர்வதேச கடல் சட்டத்தின்படி குற்றமாகும். கடந்த 1986 IWC என்ற சர்வதேச திமிங்கல ஆணையத்திலிருந்து ஜப்பான் வெளியேறியது. இதையடுத்து இந்த ஆண்டு மீண்டும் வணிக நோக்கத்திற்காக டால்பின் வேட்டையை ஜப்பான் தொடங்கியுள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com