காயத்திற்கு கட்டும் துணிகூட இல்லை! சோகத்தின் உறைவிடமாகும் சிரியா! நீளுமா உதவிக்கரம்?

காயத்திற்கு கட்டும் துணிகூட இல்லை! சோகத்தின் உறைவிடமாகும் சிரியா! நீளுமா உதவிக்கரம்?
காயத்திற்கு கட்டும் துணிகூட இல்லை! சோகத்தின் உறைவிடமாகும் சிரியா! நீளுமா உதவிக்கரம்?

நிலநடுக்கத்தின் இடிபாடிகளில் சிக்கிவரும் சிரிய மக்களுக்கு, காயத்திற்கு கட்டும் துணி, பிளாஸ்டர்ஸ், கையுறை முதலான மருத்துவ உபகரணங்கள் கூட இல்லாமல் தத்தளிக்கிறது சிரியாவின் குகை மருத்துவமனை. தங்களுக்கு மருத்துவ உதவிகள் கிடைக்கவும் தடைகள் இருப்பதால், அங்கிருக்கும் மருத்துவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து காத்துள்ளனர்.

துருக்கி - சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள காசியான்டெப் நகரத்தில், பிப்ரவரி 6-ஆம் தேதி அதிகாலை 4.17 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சில நிமிடங்களிலேயே அடுத்ததாக துருக்கியின் ஹரமனமராஸ் மாகாணம் எல்பிஸ்டன் மாவட்டத்தில் மற்றொரு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் 7.5 ஆக பதிவாகியது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்து 3, 4, 5ஆவது என நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதில் துருக்கி - சிரியாவின் பல்வேறு நகரங்களில் கட்டடங்கள் சீட்டுக்கட்டுகள் போல் இடிந்து சரிந்து தரைமட்டமாகின.

2 நாட்களில் 5 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்-21,000ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை

நிலநடுக்கமானது அதிகாலையில் ஏற்பட்டதால் வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த ஆயிரக்கணக்கானோர் இடிபாடுகளுக்குள் சிக்கினர். இந்நிலையில் தற்போது துருக்கி - சிரியா நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி நிலநடுக்கத்தால் துருக்கியில் 17, 674 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சிரியாவில் 3, 377 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கணக்குகள் தெரிவிக்கின்றன. இதனால், துருக்கி-சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 21,051 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நிலநடுக்கத்தால் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் சிரியாவின் வடமேற்கில் உள்ள அல் அதாரிப் என்ற நகரத்தில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்.நேஹாத்ப்துல்மஜீத் (33) நிலநடுக்கத்தின் தாக்கத்தை ஊடகங்களிடையே பகிர்ந்து கொண்டார். இவர் 2016-ம் ஆண்டில் உள்நாட்டுப் போரில் ஆயிரக்கணக்கானவர்களை பலிகொண்ட அலெப்போ முற்றுகையிலிருந்து தப்பியவர். அப்போது அரசாங்கப் படைகள் நகரத்தை முழுவதுமாக கைப்பற்றியதையடுத்து, டாக்டர் அப்துல்மஜீத் நாட்டின் வடமேற்கில் உள்ள அல் அதாரிப் என்ற நகரத்தை சென்றடைந்தார். பின்னர் அங்குள்ள மருத்துவமனையில் பணிபுரியத் தொடங்கினார். அம்மருத்துவமனைதான், நாம் கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்ட கோர சம்பவங்களை சந்தித்து வரும் குகை மருத்துவமனை.

குகை மருத்துவமனை:

அல் அதாரிபில் உள்ள இம்மருத்துவமனை 2017-ம் ஆண்டில் சிரியன் அமெரிக்கன் மெடிக்கல் சொசைட்டியால், பொதுமக்களுக்கு 39 மருத்துவ வசதிகளை அளிக்க கட்டப்பட்டது. இது அலெப்போவை, இட்லிப் நகருடன் இணைக்கும் ஒரு பிரதான சாலையில் சண்டை நடைபெறும் இடத்துக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையானது இடைவிடாத ரஷ்ய மற்றும் சிரிய குண்டுவெடிப்புகளிலிருந்து பாதுகாப்பாக இருக்க, நிலத்தடியில் ஆழமாக தோண்டப்பட்டு இயங்கி வருகிறது. இதன் காரணமாக இந்த மருத்துவமனை ‘குகை’ என்றும் அழைக்கப்படுகிறது.

வழக்கமாக உள்நாட்டுப் போரால் பறிபோன உயிர்களையே பார்த்த அப்துல் மஜீத், முன்பொருமுறை தொலைபேசி பேட்டி ஒன்றின்போது “எங்கள் மருத்துவமனை எப்போதும் சோகத்தால் மட்டுமே நிரம்பியிருக்கும்” என தெரிவித்திருந்தார். ஆனால், இந்த முறை அவர் போரை விட, முற்றிலும் மாறுபட்ட ஒரு கோரமான எதிரியை சந்தித்துள்ளோம் நாங்கள் என தெரிவித்துள்ளார்.

குகை மருத்துவமனையை நாடும் மக்கள்

இதற்கிடையே நிலநடுக்கத்தால் துருக்கியின் எல்லைக்கு அருகில் நூற்றுக்கணக்கான உயிரிழப்புகள் நிகழ்ந்ததையடுத்து, பொதுமக்கள் பலரும் அல் அதாரிப் பகுதியில் உள்ள 'குகை' மருத்துவமனையை நோக்கி வரத்தொடங்கினர். அவர்களில் பலர் மருத்துவமனையை அடைந்தபோதே உயிரிழந்து விட்டனர். பிப்ரவரி 6-ஆம் தேதி முதல் மருத்துவமனையில் 148 உயிரற்ற உடல்களை எண்ணியிருப்பதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து டாக்டர் அப்துல்மஜீத் பேசுகையில், "பிப்ரவரி 6-ஆம் தேதி முதல் தொடர்ந்து மனித உடல்கள் வந்துகொண்டே இருக்கின்றன... போர்க் காலகட்டத்தில்கூட எப்படியோ தப்பித்து பிழைத்த பச்சிளம் குழந்தைகளும்கூட, இப்போது எந்தக் காரணமும் இல்லாமல் உயிரிழந்ததை ஏற்கவே முடியவில்லை. அதை நினைத்து நினைத்து அழுதோம். அதேநேரம் பலர் உயிர்பிழைக்கவும் செய்துள்ளனர். உதாரணத்துக்கு, நிலநடுக்கம் நடந்த மறுதினம் செவ்வாயன்று, 36 மணி நேரம் இடிபாடுகளில் சிக்கிய மூன்று உடன்பிறந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் பிழைத்தனர். அவர்கள் இன்னும் உயிருடன் இருப்பது ஒரு ஆசீர்வாதம்.

நான் எனது குழந்தைகளுடன் அருகில் உள்ள கிராமத்தில் தங்கியுள்ளேன். நாங்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது நிலநடுக்கம் ஏற்பட்டதில், அந்த பகுதி முழுவதும் அதிர்ந்தது. எங்கள் வாழ்க்கை, எங்கள் கண்களுக்கு முன்பாகவே ஆட்டம்காண்பதை அன்று நான் கண்டேன். மருத்துவமனைக்குச் சென்று மக்களைக் காப்பாற்றத் தொடங்கும் முன், அடுத்து வரவிருக்கும் நிலநடுக்கத்தை எண்ணி எனது குடும்பத்தினர் பல மணி நேரம் குளிரில் தத்தளித்தனர். அவை என் முழு வாழ்க்கையில், நான் பார்த்த மிக சோகமான நாட்கள்” என்றார்.

ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நடைபெற்ற உள்நாட்டு போருக்குப் பிறகு, தற்போது சிரிய மருத்துவர்கள் புதிய நெருக்கடியில் சிக்கியுள்ளனர். இதற்கிடையே நிலநடுக்கம் ஏற்பட்ட சில பகுதிகளில் மீட்பு முயற்சிகள் தடைபட்டுள்ளன. அந்த பகுதிகளில், சிரியாவின் அரசு மற்றும் எதிர்க்கட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களும் அடங்கும்.

அலறல் சத்தம் கேட்டு நகங்களால் இடுபாடுகளை கிளறும் மக்கள்

கடந்த 2018-ஆம் ஆண்டு குகை மருத்துவமனையில் பணிபுரிந்த முர்ஹாஃப் அசாஃப், அதன்பின் பணியிலிருந்து விலகியுள்ளார். அவர் இப்போதும் அங்குள்ள ஊழியர்களுடன் அடிக்கடி தொடர்பில் இருப்பதாக கூறி ஊடகமொன்றுக்கு, “மறுபுறம் கேட்கும் அலறல் குரல்களை அடைவதற்காக, மக்கள் தங்கள் விரல் நகங்களால் இடிபாடுகளைத் தோண்டுகிறார்கள். அந்தளவுக்கு இடிபாடுகளும் உள்ளது, அரசுதரப்பு மீட்பில் சுணக்குமும் இங்கு உள்ளது” என தற்போது உருக்கமாக தெரிவித்துள்ளார்.

மேலும் குகை மருத்துவமனை ஊழியர்கள், “தி டைம்ஸ்”-உடன் வீடியோக்கள், புகைப்படங்களை பகிர்ந்து கொண்டனர். அந்த வீடியோவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் போர்வைகளால் மூடப்பட்டு தரையில் வரிசையாக கிடத்தப்பட்டுள்ளது தெரிகிறது. மற்றொரு வீடியோவில், அடுக்கி வைக்கப்பட்ட உடல்களுடன் வாகனமொன்று மருத்துவமனைக்கு வருகிறது. இப்படி எங்கெங்கு காணினும் மனித சடலங்களால் நிரம்பி வருகிறது அம்மருத்துவமனை.

போரை விட மோசமான ஒரு எதிரியை பார்த்தது போல் இருக்கிறது

இட்லிப் நகரத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த டாக்டர் ஒசாமா சல்லூம் என்பவருக்கு நிலநடுக்க காலத்துக்காக குகை மருத்துவமனையிலிருந்து அவசர அழைப்பு சென்றுள்ளது. அப்படி அங்கு சென்ற அவர், சிபிஆர் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தபோதே, சுமார் 6 வயதுடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்துவிட்டான். கடுமையான அலெப்போ முற்றுகை காலகட்டத்தின் போது நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவரான சல்லூம், சிறுவனின் உயிர் பிரிவதை கண்டு கலங்கியதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சல்லூம் பேசுகையில், “இது மீண்டுமொரு போர் என்றுதான் என் மனம் என்னிடம் கூறியது. இத்தகைய சோகமான நிகழ்வுகள், போரின் காலகட்டத்திற்கு வெள்ளம்போல என்னை அடித்துச் சென்றது போல் இருந்தது. துரதிஷ்டகரான கனவுகளிலிருந்து விழித்து விழித்து அதிர்ச்சியில் எழுவதைப் போல்தான் ஒவ்வொரு நொடியும் உணர்கிறேன்" என்றார்.

போர்க்காலத்தின் போது ஏற்பட்ட அனுபவங்கள், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட மனித உயிரிழப்பிற்கு தங்களை ஏற்கெனவே நன்கு தயார்படுத்தியதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். கடந்த 2018-ஆம் ஆண்டில் குகையில் பணிபுரிந்த டாக்டர் அசாஃப் கூறுகையில், "இந்த மருத்துவர்கள் போர்க்கால நிகழ்வுகளால் தனித்துவமாகப் பயிற்சி பெற்றவர்கள். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இப்படி பயிற்சி பெற்றவர்களில் பலர் இப்போது நாட்டில் இல்லை. குகை மருத்துவமனை தொடங்கப்பட்டபோது 11 அறுவை சிகிச்சை நிபுணர்களைக் கொண்டிருந்தது. கடந்த 5 ஆண்டுகளில் ஒரே நேரத்தில் சில நபர்களாக இது சுருங்கிவிட்டது. இதனால் இங்கு வரும் நோயாளிகளில், சிலரை மட்டுமே எங்களால் காப்பாற்ற முடிந்த நாட்கள் இருந்தன. போதிய ஆட்கள் இல்லாமல், அனைவரையும் காப்பாற்ற முயற்சித்தால் கடைசியில் யாரையும் காப்பாற்ற முடியாது என்ற நிலை வந்துவிடும் என்பதால் மிக கவனமாக இருப்போம்” என்றுள்ளார்.

எஸ்.ஏ.எம்.எஸ் மற்றும் மனித உரிமைகளுக்கான மருத்துவர்களின் கூட்டு அறிக்கையின்படி, “மார்ச் 2021-ல் குகை மருத்துவமனை ஒரு பீரங்கி குண்டுவெடிப்பின் கீழ் சிக்கியது. இதில் 7 நோயாளிகள் கொல்லப்பட்டனர். ஐந்து மருத்துவ ஊழியர்கள் உட்பட 15 பேர் காயமடைந்தனர்” என தெரிகிறது.

மருத்துவமனைகளின் மீதுள்ள அடக்குமுறையால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன

கடந்த 2011-ஆம் ஆண்டில் உள்நாட்டுப் போர் தொடங்கியதில் இருந்து, சிரிய ஆட்சியின்கீழ் நிகழ்ந்த மிகக் கொடூரமான வன்முறைகளின் அடையாளமே குகை மருத்துவமனையின் மீதான தாக்குதல் என சொல்லப்படுகிறது. மனித உரிமைகளுக்காக மருத்துவர்கள் போராட தொடங்கியதைக்கூட எதிர்த்து 400 சுகாதார நிலையங்கள் மீதான 601 தாக்குதல்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. லண்டனில் உள்ள `பயோமெட் சென்ட்ரல்’ 2021-ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையின்படி, “கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள் மீதான ஒடுக்குமுறை, சிரியாவின் சுகாதார அமைப்பைப் பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளது. இது சர்வதேச கண்டனத்தைப் பெற்றதுடன், சிரியாவின் சுகாதாரப் பணியாளர்களில் 70 சதவீதம் பேர் நாட்டை விட்டு வெளியேறத் தூண்டியது” என தெரிகிறது.

தற்போது நிலநடுக்கத்திற்கு பிறகு சிரியாவுக்கான உதவி தடைபட்டுள்ளது. ஏனெனில் துருக்கியில் இருந்து, சிரிய எதிர்க்கட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்குச் செல்லும் முக்கிய எல்லையைச் சுற்றியுள்ள சாலைகள் சேதமடைந்துள்ளன. மேலும் துருக்கியில் உள்ள உதவிக் குழுக்கள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. காயங்களைக் கட்டுவதற்கான கையுறைகள், பிளாஸ்டர் போன்ற முக்கியமான பொருட்கள் குறைந்து வருவதாக அறுவை சிகிச்சை நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலை தொடர்ந்தால், அல் அதாரிபில் உள்ள நிலத்தடி மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களுக்கு, உயிர்களை காப்பாற்று சிரமமாக மாறக்கூடும். இதனால் இப்போது உலகெங்கிலும் இருந்து நீளும் எல்லா உதவிக்கரங்களும், எவ்வித தடையுமின்றி உடனடியாக தங்களுக்கு கிடைக்க, அரசு வழிவகை செய்ய வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாகவும் கோரிக்கையாகவும் உள்ளது.

- ராஜா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com