கிளர்ச்சியாளர்களுக்கு உதவாமல் இருந்தால் உதவிகள் கிடைக்கும்: சிரியாவில் துண்டுப் பிரசுரம் விநியோகம்
பெரும்போர் நடந்துவரும் சிரியாவின் கிழக்கு கவுட்டாவில் அரசுப் படைகள் விமானங்கள் மூலமாக துண்டுப் பிரசுரங்களை வீசி வருகின்றன.
சிரியாவில் அரசுப்படைக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடுமையான சண்டை நடைப்பெற்று வருகிறது.சிரியாவின் கிழக்கு கவுட்டா நகரில் அரசுப்படைகளின் தாக்குதலில் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சிரியாவில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன் வெளியான புகைப்படங்கள் நெஞ்சை பதறவைக்கும் வண்ணம் இருந்தது. கவுட்டாவில் ஆங்காங்கே சேகரித்து வைக்கப்பட்ட குழந்தைகளின் சடலங்கள் மனதை பதைபதைக்கச் செய்கின்றன. ஆனால் கிளர்ச்சியாளர்களை மட்டுமே தேடி அழிப்பதாக அரசுப்படைகள் கூறுகின்றன.
சிரியாவில் அரசுப் படைகளின் தாக்குதலால் சுமார் ஆயிரம் பேர் காயமடைந்திருப்பதாகவும், அவர்களுக்கு உடனடி மருத்துவச் சிகிச்சை அவசியம் என்றும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. அவர்களில் குழந்தைகள் உள்ளிட்ட சுமார் 100 பேர் முதற்கட்டமாக வெளியேற அனுமதிக்க வேண்டும் எனவும் அந்த அமைப்பு கேட்டுக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் கிழக்கு கவுட்டாவில் அரசுப் படைகள் விமானங்கள் மூலமாக துண்டுப் பிரசுரங்களை வீசி வருகின்றன. அதில் மருத்துவமனைகள் உள்ளிட்ட பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிளர்ச்சியாளர்களுக்கு உதவி செய்யாமல் இருந்தால், பாதுகாப்பு, உணவு, தங்குமிடம் உள்ளிட்டவற்றை வழங்குவதற்கு அரசு தயாராக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது