சிரியா | மீண்டும் வெடித்த உள்நாட்டுப் போரால் பலியாகும் பொதுமக்கள்; குவியல் குவியலாக சடலங்கள்!
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சிரியாவை பஷார் அல் அசாத் கடந்த 24 ஆண்டுகளாக ஆட்சி செய்துவந்த நிலையில், ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) என்ற இஸ்லாமிய ஆயுதக் குழுவின் தலைமையிலான கிளர்ச்சிப் படை, கடந்த ஆண்டு இறுதியில் தீவிர தாக்குதல் மற்றும் அரசுப் பிடியில் இருந்த நகரங்களைக் கைப்பற்றியதன் வாயிலாக அவருடைய சாம்ராஜ்ஜியத்திற்கு முடிவுரை எழுதப்பட்டது.
அசாத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் ஆளும் கட்சியாக மாறியது. மேலும், சிரியாவின் புதிய அரசின் இடைக்கால பிரதமராக முகமது அல் பஷீரும், இடைக்கால அதிபராக கிளர்ச்சிப் படையின் தலைவரான அகமது அல்-ஷராவும் தேர்வு செய்யப்பட்டனர். இந்த நிலையில் முன்னாள் அதிபர் அசாத்தின் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த அலாவைத் பிரிவினர் அதிகமாக வசிக்கும் கடற்கரைப் பகுதியில் கடந்த வாரம் வன்முறை வெடித்தது.
அசாத் ஆதரவாளர்கள் அரசு பாதுகாப்புப் படையினரின் வாகன அணிவகுப்பின் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 231 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதில், சிரிய பாதுகாப்புப் படையினர் மற்றும் அசாத் ஆதரவு போராளிகளைத் தவிர, 1,383க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பிரிட்டனை தளமாகக் கொண்ட சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் (SOHR), கடந்த வாரம் முதல் கடலோரப் பகுதியில் வன்முறை அதிகரிப்பில் 1,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உட்பட கிட்டத்தட்ட 1,500 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
உயிரிழந்த பொதுமக்களில் பெரும்பாலானோர் அலாவைத் சிறுபான்மையினர் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, எங்கும் சடலங்கள் குவியல் குவியலாகக் காணப்படுகிறது. இந்த தாக்குதல்களால் லடாகியா மற்றும் டார்டஸ் போன்ற நகரங்களில், பல கடைகளும் கிட்டத்தட்ட அனைத்து உணவகங்களும் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து வன்முறையை ஒடுக்குவதற்கு சிரிய அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
இந்நிலையில் உயிரிழந்த பொதுமக்களில் பலர் பாதுகாப்புப் படைகள் மற்றும் அவற்றின் துணை அமைப்பினரால் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. முன்னதாக, கடந்த வாரம் அப்பகுதிகளில் பெண்கள் நிர்வாணமாகத் தெருக்களில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் சுட்டுக் கொல்லப்படுவதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன.