வெறும் 3 இடங்கள்தான் வித்தியாசம்.. ஆட்சியைப் பிடித்த எதிர்க்கட்சி.. சவாலில் ஸ்வீடன்!
ஸ்வீடன் நாடாளுமன்றத் தேர்தலில் வலதுசாரி கூட்டணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அண்மையில் நடந்த தேர்தலில் இடதுசாரி எதிர்க்கட்சிக் கூட்டணி 176 இடங்களைக் கைப்பற்றி மிகக் குறைந்த பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து புதிய அரசை அமைப்பதற்கு வழிவகுக்கும் வகையில் பிரதமர் தனது ராஜிநாமா கடிதத்தைச் சமர்ப்பித்துள்ளார்.
349 தொகுதிகளைக் கொண்ட ஸ்வீடன் நாடாளுமன்றத்துக்கு அண்மையில் தேர்தல் நடைபெற்றது. இதில், 176 இடங்களைப் பெற்ற எதிர்க்கட்சியான இடதுசாரிக் கூட்டணி வெற்றி பெற்றது. தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, புதிய அரசு அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகளைத் தொடங்க உல்ஃப் கிறிஸ்டர்சன் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ளார்.
இதன்மூலம் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவரான மக்டலினா ஆண்டர்சன் பிரதமராகப் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 2021–2022 காலக்கட்டத்தில் ஸ்வீடனின் முதல் பெண் பிரதமராகப் பணியாற்றிய மக்டலினா ஆண்டர்சன், 4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்க உள்ளார். வெற்றி குறித்து மக்டலினா ஆண்டர்சன், "ஸ்வீடன் மக்கள் நாட்டின் புதிய திசைக்கும், பிளவுகளுக்கு எதிரான ஒற்றுமைக்கும் வாக்களித்துள்ளனர்; மக்களின் இந்த விருப்பத்தை எனது அரசு நிறைவேற்றும். காலநிலை மாற்றம், கல்வித் துறைச் சீர்திருத்தம், மேம்படுத்தப்பட்ட சுகாதாரம், முதியோர் பராமரிப்பு மற்றும் சீரான குடியேற்றக் கொள்கை ஆகியவை புதிய அரசின் முக்கிய முன்னுரிமைகளாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
349 நாடாளுமன்ற இடங்களில் 176 இடங்களை மட்டுமே இடதுசாரிக் கூட்டணி பெற்றுள்ளது. அதாவது, வெறும் 3 இடங்கள் மட்டுமே அக்கட்சி கூடுதல் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. இதனால் எந்தவொரு புதிய சட்டத்தையும் நிறைவேற்ற அனைத்துக் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவும் அவசியமாகும். நாடாளுமன்றத்தில் வலதுசாரிக் கூட்டணி 173 இடங்களுடன் மிக பலமான எதிர்க்கட்சியாக இருக்கும் என்பதால், அரசின் ஒவ்வொரு நகர்விலும் நெருக்கடிகள் அதிகரிக்கும்.
குறிப்பாக, கூட்டணியில் இடம்பெற்றுள்ள மையக் கட்சி (Centre Party) மற்றும் இடதுசாரிக் கட்சி (Left Party) இடையே பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் வரி விதிப்பில் முரண்பாடுகள் நிலவுகின்றன. ஆண்டர்சனின் சோஷியல் டெமாக்ரட்ஸ் கட்சி கடுமையான குடியேற்றக் கட்டுப்பாடுகளையும் குற்றத் தடுப்பில் தீவிரப் போக்கையும் ஆதரிக்கிறது. ஆனால் கூட்டணியில் உள்ள கிரீன்ஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் இதில் மாறுபட்ட தாராளமய நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன. இதனால் அக்கட்சிகள் இடையே உள்ள கொள்கை வேறுபாடுகளைச் சீர்செய்து நிலையான அரசை உருவாக்குவது ஆண்டர்சனுக்கு முக்கிய சவாலாக இருக்கும்.

