‘தினம் 6 மணி நேரம் செக்ஸ் போட்டியா?’ விளையாட்டு அமைப்பு சொல்வதென்ன?

உலகில் முதல்முறையாக ‘செக்ஸ்’ சம்பந்தப்பட்ட ஒரு விளையாட்டை ஸ்வீடன் நாடு, வரும் ஜூன் 8ஆம் தேதி நடத்த இருக்கிறது. இதனால் இந்த விளையாட்டுக்கு இப்போதே எதிர்பார்ப்புகள் கூடியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
‘ஐரோப்பா சாம்பியன்ஷிப்'
‘ஐரோப்பா சாம்பியன்ஷிப்' twitter

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்வீடன் அரசு, உடலுறவை (Sex) விளையாட்டாக அங்கீகரித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் அது, ‘ஐரோப்பா சாம்பியன்ஷிப்' என்ற பெயரில் போட்டியை நடத்தத் திட்டமிட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்தப் போட்டி வருகிற ஜூன் 8ஆம் தேதி முதல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் நாட்டின் செக்ஸ் கூட்டமைப்பின் மேற்பார்வையில் நடைபெறும் இந்த போட்டியில், பல்வேறு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் 16 வெவ்வேறு பிரிவுகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர்.

தம்பதியினரிடையே உள்ள கெமிஸ்ட்ரி, பாலினம் பற்றிய அறிவு, சகிப்புத்தன்மை போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு வெற்றியாளர்கள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் நபர்கள் தினமும் ஆறு மணி நேரம் வரை செக்ஸ் அமர்வுகளில் ஈடுபடுவார்கள் எனவும், ஒரு தனி ஆட்டம் குறைந்தது 40-45 நிமிடங்களுக்கு நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் துணையை கவர்தல், உடல் மசாஜ், உடலுறவு, சகிப்புத்தன்மை என 16 பிரிவுகளில் போட்டி நடத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

போட்டி மூன்று நிலைகளாகப் பிரிக்கப்பட்டிருப்பதாகவும், ஒவ்வொரு நிலைக்கும் முன்னேற குறிப்பிட்ட எண்ணிக்கையிலான புள்ளிகள் தேவை எனவும், பங்கேற்பாளர்கள் ஒவ்வொரு துறையிலும் 5 முதல் 10 புள்ளிகளைப் பெற முடியும் எனவும் கூறப்படுகிறது.

இந்தப் போட்டியில் வெற்றியாளர்களை நடுவர் குழு தேர்வு செய்யும் எனவும், மற்றும் பார்வையாளர்களின் முடிவுகளும் வெற்றியாளர்களைத் தேர்ந்து எடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் எனவும் தெர்விக்கப்பட்டுள்ளது. அதாவது, போட்டியில் 70 சதவீதம் வாக்குகளை பார்வையாளர்கள் அளிப்பார்கள் என்றும், நடுவர்கள் 30 சதவீதம் வாக்குகளை அளிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்த விளையாட்டுக்கு இப்போதே உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. குறிப்பாக, இந்தப் போட்டியில் கலந்துகொள்வதற்காகப் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் இருந்து 20 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. அதேநேரத்தில் ஓர் அந்தரங்க விஷயத்தை இப்படி பொதுவெளியில் விளையாட்டு என்ற பெயரில் நடத்துவது மிகவும் கேவலமான விஷயம் என எதிர்ப்புக் குரல்களும் வலுக்கத் தொடங்கியுள்ளன.

இதுகுறித்து ஸ்வீடன் செக்ஸ் கூட்டமைப்பு, “பிற விளையாட்டுகளைப் போன்றே இந்த செக்ஸ் விளையாட்டுக்கும் பயிற்சி தேவைப்படுகிறது. விளையாட்டைப்போலவே, உடலுறவில் விரும்பிய முடிவுகளை அடைவதற்கு பயிற்சி தேவைப்படுகிறது. இந்த போட்டியில் எதிராளிக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதே குறிக்கோள். பாரம்பரிய விளையாட்டுகளுக்கு மாறாக, தோல்விகள் பெரும்பாலும் ஏமாற்றத்தை விளைவிக்கும்போது, ​​இந்த விளையாட்டில் போட்டியாளரின் வெற்றி, அவர்களது துணையைத் திருப்திப்படுத்தும் திறனால் தீர்மானிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளது.

இந்தச் செய்தி உலகம் முழுவதும் காட்டுத் தீயாய்ப் பரவிய நிலையில், இதற்கு ஸ்வீடன் நாட்டு விளையாட்டு அமைப்பு விளக்கம் அளித்துள்ளது. ”இது ஸ்வீடன் விளையாட்டு மற்றும் ஸ்வீடன் நாட்டின் மீதான மதிப்பை கெடுக்கும் நோக்கத்துடன் பரப்பப்படும் தவறான தகவல். ஸ்வீடிஷ் விளையாட்டுக் கூட்டமைப்பில், பாலியல் சம்மேளனம் (Sex federation) உறுப்பினராக இல்லை. இந்த தகவல்கள் அனைத்தும் பொய்யானவை” என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com