9 மாதம் கழித்து வீடு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்.. வரவேற்ற செல்லப்பிராணிகள்!
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா சார்பில், போயிங் ஸ்டார்லைனர் ராக்கெட் மூலம் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் 5ஆம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்றனர். அங்கிருந்து ஆய்வு நடத்திவிட்டு, ஜூன் 14ஆம் தேதி பூமிக்கு திரும்புவதாக இருந்த நிலையில் அவர்கள் பயணித்த ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதன்காரணமாக இருவரும் அங்கேயே இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. 9 மாதங்களுக்கும் (கிட்டத்தட்ட 286 நாள்கள்) மேலாக அவர்கள் விண்வெளியில் தங்கி இருந்த நிலையில், அவர்களை மீட்க தொடர் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் எந்த பலனும் கிடைக்கவில்லை.
இதற்கிடையே அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ட்ரம்ப், அதற்கான முயற்சிகளை, அவரது நண்பர் எலான் மஸ்க்கிடம் ஒப்படைத்து பணிகளைத் துரிதப்படுத்தினார். இதற்காக, இருவரையும் பூமிக்கு அழைத்து வருவதற்காக, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் நாசாவும் கைகோர்த்தது. எனினும், அந்தப் பணிகளிலும் சிறுசிறு தடங்கல்கள் ஏற்பட்டாலும், இறுதியில், கடந்த மார்ச் 19ஆம் தேதி அதிகாலை 3.30 மணியளிவில் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து SpaceX-ன் டிராகன் விண்கலம் மூலம் சுனிதா வில்லியம்ஸ், புச் வில்மோர், நிக் ஹேக், அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகிய 4 விண்வெளி வீரர்கள் பத்திரமாக பூமிக்கு திரும்பினர். அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்கிடையே செய்தியாளர்களைச் சந்தித்த சுனிதா வில்லியம்ஸ், விண்வெளியில் இருந்த தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்த நிலையில், சுனிதா வில்லியம்ஸ் 9 மாத காலம் விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு திரும்பிய நிலையில் அவர் கண்காணிப்பில் இருந்துவந்தார். தற்போது அவர் வீட்டுக்கு திரும்பிய நிலையில் அங்கிருந்த சுனிதாவின் வளர்ப்பு நாய்கள் அவரை வாலை ஆட்டி ஆர்வத்துடன் வரவேற்றன. அந்த இரு நாய்களையும் முதுகைத் தடவிக்கொடுத்து சுனிதா மகிழ்ச்சியில் ஆழ்ந்தார். வீடு திரும்பியவுடன் கிடைத்த முதல் வரவேற்பே மிகுந்த மன நிறைவைத் தந்ததாக சுனிதா வில்லியம்ஸ் குறிப்பிட்டுள்ளார். சுனிதா வில்லியம்சின் இப்பதிவுக்கு தொழிலதிபர் எலான் மஸ்க் விருப்பக்குறி இட்டுள்ளார்.