தர்மன் சண்முகரத்னம் முதல் சுந்தர் பிச்சை வரை... உலகை ஆளும் தமிழர்கள்!

இங்கிலாந்து பிரதமரசுந்தர் பிச்சை முதல் சிங்கப்பூர் அதிபர் வரை, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் உலகெங்கிலும் தலைமைப் பொறுப்புகளில் தங்கள் திறமையை நிரூபித்துள்ளனர்.
உலகை ஆளும் தமிழர்கள்
உலகை ஆளும் தமிழர்கள்ட்விட்டர்

உலகை ஆளும் தமிழர்கள்

இன்றைக்கு உலகம் முழுவதிலும் பல நாடுகளில் பல கோடி தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். அதிலும் சில தமிழர்கள் உலக அளவில் மிகப்பெரிய அதிகார பதவிகளை வசித்து வருகின்றனர். தமிழகத்தில் தமிழர்களே அடித்துக்கொள்ளும் சூழலிலும், தமிழராட்சி பற்றிய பேச்சுகள் நிலவும் நிலையிலும் உலகத்தின் பல நாடுகளிலும் வாழும் தமிழர்கள் கல்வியிலும் சிறந்து, அங்குள்ள அதிகாரமிக்க பதவிகளிலும் இருக்கின்றனர். இது, தமிழின் அடையாளமாகவும் தமிழர்களின் பெருமையாகவும் இருக்கிறது.

அந்த வகையில் மதுரையை சேர்ந்த சுந்தர் பிச்சை முதல் சிங்கப்பூர் அதிபர் வரை, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர்கள், வேறு நாடுகளை பூர்வீகமாக கொண்ட தமிழர்கள் உலகெங்கிலும் தலைமைப் பொறுப்புகளில் தங்கள் திறமையை நிரூபித்துள்ளனர். இவர்கள் நம் தமிழர்களுக்கு எல்லாம் ஒரு சான்றாக இருப்பதுடன், அவர்கள் நம் கனவுகளை வெல்வதற்கும் ஊக்கமருந்தாய் இருக்கிறார்கள். அவர்கள் பற்றிய தொகுப்பை இங்கே காணலாம்.

சிங்கப்பூர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தர்மன் சண்முகரத்னம்

சமீபத்தில் நடைபெற்ற சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் 70.4 சதவிகித வாக்குகளைப் பெற்று, தமிழரான தர்மன் சண்முகரத்னம் வெற்றி பெற்றுள்ளார். இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழரான தர்மன் சண்முகரத்னம், சிங்கப்பூரில் ’நோயியலின் தந்தை’ என்று அழைக்கப்படும் மருத்துவ விஞ்ஞானி கே.சண்முகரத்தினத்தின் மகன் ஆவார். சிங்கப்பூரில் பிப்ரவரி 25, 1957 இல் பிறந்த தர்மன், லண்டன் கூல் ஆப் எக்னாமிஸில் இளங்கலை பொருளாதார பட்டமும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வொல்ப்சன் கல்லூரியில் முதுகலை பொருளாதார (தத்துவம்) பட்டமும், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஹார்வர்ட் கென்னடி பள்ளியில் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும் (MPA) பெற்றவர் ஆவார்.

தர்மன் சண்முகரத்னம்
தர்மன் சண்முகரத்னம்twitter

ஆளும் மக்கள் செயல் கட்சியில் (PAP) சேர்ந்து, 2001ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தர்மன் சண்முகரத்னம், 2001 முதல் 2019 வரை துணை பிரதமராகப் பதவி வகித்தார். மேலும், தர்மன் சண்முகரத்னம் 2001ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டுவரை தொடர்ந்து ஜூரோங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துவந்துள்ளார்.

கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான சுந்தர்பிச்சை

கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை, சென்னையை பிறப்பிடமாகக் கொண்டவர். கரக்பூரிலுள்ள ஐஐடியில் பொறியியல் பட்டம் பெற்ற இவர், பின்னர், மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றார்.

சுந்தர் பிச்சை
சுந்தர் பிச்சை

அங்கு ஸ்டான்போர்டு பல்கலையில் எம்.எஸ் பட்டமும், அதைத் தொடர்ந்து உலகப் புகழ்பெற்ற வார்ட்டன் பல்கலைக்கழகத்தின் வர்த்தகப் பள்ளியில் எம்.பி.ஏ பட்டமும் பெற்றார். 2004ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தில் இணைந்த அவர், 2015இல் அதிகாரபூர்வமாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக பதவியேற்று, இன்றும் அப்பதவியில் தொடர்ந்து வருகிறார்.

அமெரிக்க துணை அதிபரான கமலா ஹாரிஸ்

அமெரிக்க துணை அதிபரான கமலா ஹாரிஸ், தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். கமலா ஹாரீஸின் பெற்றோர் அமெரிக்காவில் குடியேறியவர்கள் ஆவர். அவரது தந்தை ஜமைக்காவைச் சேர்ந்தவர். தாயார் இந்தியர் ஆவார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற கமலா ஹாரிஸ், கலிபோர்னியா மாகாணத்தில் அட்டர்னி ஜெனரலாகத் தேர்வு செய்யப்பட்ட முதல் கறுப்பின பெண் என்ற பெருமையையும் பெற்றார்.

கமலா ஹாரீஸ்
கமலா ஹாரீஸ்

அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு போட்டியிட்டு தென் ஆசிய பாரம்பரியத்தை கொண்ட முதல் பெண் என்ற பெருமையையும் கமலா ஹாரீஸ் பெற்றார். தற்போது துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரீஸ், அடுத்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் அப்பதவிக்குப் போட்டியிடப் போவதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

நியூயார்க் நகர முதல் இந்திய குற்றவியல் நீதிபதியான ராஜராஜேஸ்வரி

சென்னையைச் சேர்ந்த ராஜராஜேஸ்வரி நியூயார்க் நகர குற்றவியல் நீதிபதியாக, கடந்த 2015ஆம் ஆண்டு பதவியேற்றார். இதன்மூலம் அப்பதவியை வகித்த முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார். தனது 16 வயதில் அமெரிக்காவிற்குக் குடியேறிய அவர், சிறந்த வழக்கறிஞராக மட்டும் இல்லாமல் அமெரிக்காவில் நடைபெறும் இந்தியா கலாசார நிகழ்வுகளில் நடனக் கலைஞராகவும் தன்னுடைய திறமையை வெளிக்காட்டியவர்.

ராஜராஜேஸ்வரி
ராஜராஜேஸ்வரி

உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் பதவி உயர்வு பெற்ற ராஜராஜேஸ்வரி, கடந்த 2022ஆம் ஆண்டு, குற்றவியல் நீதிமன்ற சமநீதிக் குழுவின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து சமூக நீதிக்காகப் போராடி வருகிறார்.

கயானா நாட்டின் முன்னாள் பிரதமரான மோசஸ் வீராசாமி நாகமுத்து

2015ஆம் ஆண்டு கயானா நாட்டில் பிரதமர் பதவிக்குத் தேர்வானவர் தமிழரான மோசஸ் வீராசாமி நாகமுத்து. ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில், தமிழகத்தில் இருந்து பல நாடுகளுக்கும், கரும்பு விவசாயம் மற்றும் மற்றும் தேயிலை விவசாயக் கூலிகளாக தமிழர்கள் கட்டாயப்படுத்தி அனுப்பி வைக்கப்பட்டனர். அந்த வகையில், தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர் மோசஸ் வீராசாமி நாகமுத்து. கயானாவில் பெர்பிஸ் பகுதியில் பிறந்த இவர், ஆசிரியராகவும், பத்திரிகையாளராகவும் வழக்கறிஞராகவும் பணியாற்றினார்.

மோசஸ் வீராசாமி நாகமுத்து
மோசஸ் வீராசாமி நாகமுத்து

1962ஆம் ஆண்டு அங்குள்ள மக்கள் முன்னேற்றக் கட்சியில் போட்டியிட்டு கயானா நாடாளுமன்றத்துக்குத் தேர்த்தேடுக்கப்பட்டார். பின்னர் 2015இல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று கயானாவின் பிரதமராகவும் ஆனார். கயானாவின் பிரதமராக 2015இல் பதவியேற்ற அவர், 2020 வரை அப்பதவியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு 3 முறை தேர்வான ராஜா கிருஷ்ணமூர்த்தி

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் இருந்து, அந்நாட்டின் பிரதிநிதிகள் சபைக்குத் தேர்வானவர் ராஜா கிருஷ்ணமூர்த்தி. இவரது பெற்றோர் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். தன் பெற்றோர் வழியாக அமெரிக்கா வந்த இவர், பெயோரியாவில் உள்ள ரிச்வுட் பள்ளியில் படித்தார். 1995ஆம் ஆண்டு பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் இயந்திரப் பொறியியலில் பட்டமும், 2000ஆம் ஆண்டில், ஹார்வர்டு பல்கலையில் இருந்து ஹானர்ஸ் பட்டமும் பெற்றார்.

ராஜா கிருஷ்ணமூர்த்தி
ராஜா கிருஷ்ணமூர்த்தி

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின், 2004 மற்றும் 2008 தேர்தல் பிரசார ஆலோசகராகச் செயல்பட்ட இவர், கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்கத் தேர்தலில் இல்லினோய் மாகாணத்தில் மீண்டும் வெற்றிபெற்றார். இதன்மூலம், மூன்றாவது முறையாக, அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபைக்குள் நுழைந்து சாதனை படைத்திருக்கிறார்.

கனடாவின் பாதுகாப்புத் துறை அமைச்சரான அனிதா ஆனந்த்

2019ஆம் ஆண்டு, கனடா நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற இரண்டாவது பெண் அனிதா ஆனந்த் ஆவார். தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட இவர், கனடாவில் நோவா ஸ்காட்டியா மாகாணத்தில் கென்ட்வில்லே நகரில் 1967ஆம் ஆண்டு பிறந்தார். குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் அரசியல் படிப்பில் இளங்கலைப் பட்டமும் (ஹானர்ஸ்), ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் நீதித்துறையில் இளங்கலைப் பட்டமும் (ஹானர்ஸ்), டல்ஹவுசி பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பு மற்றும் டொரான்டோ பல்கலைக்கழகத்தில் முதுகலை சட்டப் படிப்பும் முடித்துள்ளார்.

அனிதா ஆனந்த்
அனிதா ஆனந்த்

வழக்கறிஞராக, ஆராய்ச்சியாளராகப் பணியாற்றியுள்ளார். அவர் டொரான்டோ பல்கலைக்கழகத்தில் சட்டப் பேராசிரியராகவும், சட்டக் கல்வியாளராகவும் இருந்துள்ளார். இந்து நாகரிகத்தின் கனடா அருங்காட்சியகத்தின் தலைவர் பதவியையும் அனிதா ஆனந்த் வகித்துள்ளார்.

நியூ வெஸ்ட் பிரிட்டன் மாகாணத்தின் ஆளுநராகப் பதவியேற்ற முதல் தமிழர் சுசீந்திரன் முத்துவேல்

ஆஸ்திரேலியாவுக்கும், நியூசிலாந்துக்கும் இடைப்பட்ட நீர்ப்பரப்பில் அமைந்துள்ள, தென்மேற்கு பசிபிக் கடலின் நாடான பப்புவா நியூ கினியின், நியூ வெஸ்ட் பிரிட்டன் மாகாணத்தின் ஆளுநராகப் பதவியேற்ற முதல் தமிழர் என்ற பெருமையைப் பெற்றவர் சுசீந்திரன் முத்துவேல் ஆவார். சிவகாசியில் 1974இல் பிறந்த இவர், பெரியகுளத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை தோட்டக்கலைத் துறையில் பட்டப்படிப்பையும், நிர்வாகத்துறையில் முதுகலை டிப்ளமோவையும் முடித்தார்.

சுசீந்திரன் முத்துவேல்
சுசீந்திரன் முத்துவேல்

பின்னர் வேலைக்காக மலேசியா, ஆஸ்திரேலிய நாடுகளுக்குப் பயணமான இவர், அடுத்து பப்புவா நியூ கினியாவுக்குச் சென்று, அங்கு உயர்ந்த பதவியில் அமர்ந்து தமிழர்களுக்குப் பெருமையை ஏற்படுத்தி உள்ளார். 2007ஆம் ஆண்டு அந்நாட்டு குடியுரிமையைப் பெற்ற அவர், 2010ஆம் ஆண்டு அம்மக்களின் ஆதரவைப் பெற்றார். பின்னர், 2012ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு நியூ வெஸ்ட் பிரிட்டன் மாகாணத்தின் ஆளுநராகப் பதவியேற்றார். தற்போது அம்மாகாணத்தின் ஆளுநராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெப்சிகோ குளிர்பான நிறுவனத்தில் தலைமைச் செயல் அதிகாரியாக பதவி வகித்த இந்திரா நூயி

வெளிநாட்டுக் குளிர்பானங்களுக்கு எதிராக விமர்சனக் கணைகளைத் தொடுத்துவரும் இந்தியாவில்தான், அதே நாட்டில் பிறந்த ஒரு தமிழர், அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக 12 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார் என்ற செய்தி வியக்கக்கூடியதே. அதற்குப் பெருமையாக விளங்கியவர், தமிழகத்தைச் சேர்ந்த இந்திரா நூயி. இவர் உலக அளவில் பிரபல குளிர்பான நிறுவனமான பெப்சிகோவின் தலைமைச் செயல் அதிகாரியாக மிக உயர்ந்த பொறுப்பில் இருந்துள்ளார். 1955ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த இவர், ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியை முடித்தார்.

இந்திரா நூயி
இந்திரா நூயி

பின்னர் சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதப் பாடங்களில் இளங்கலைப் பட்டம் பெற்றார். தொடர்ந்து அமெரிக்காவுக்குச் சென்று யேல் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மெண்ட்டில் முதுநிலை பட்டம் பெற்றார். பிசிஜி, ஏபிபி போன்ற பெரும் நிறுவனங்களில் பணியாற்றிய பின்னர், நூயி பெப்சிகோவில் 24 ஆண்டுகள் பணியாற்றினார். அதில் 12 ஆண்டுகள் அவர் பெப்சிகோவின் தலைவராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் அடையாளமாகத் திகழும் பெப்சிகோ போன்ற பெரும் நிறுவனத்துக்குத் தலைமை தாங்கிய முதல் இந்திய வம்சாவளிப் பெண்ணும் இவரேதான்.

கனடாவில் முதன்முறையாக நாடாளுமன்றம் சென்ற முதல் தமிழர் ராதிகா சிற்பேசன்

கனடா வரலாற்றில் முதன்முறையாக நாடாளுமன்றம் சென்ற முதல் தமிழர் என்ற பெருமையை ஏற்படுத்தியவர், இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ராதிகா சிற்பேசன். இவருக்கு ஐந்து வயதானபோது அவருடைய குடும்பம் கனடாவுக்கு குடிபெயர்ந்தது. 2004ஆம் ஆண்டு ராதிகா சிற்பேசன், புதிய ஜனநாயகக் கட்சியில் இணைந்து அரசியல் பயணத்தை ஆரம்பித்தார். பின்னர் ஸ்கார்பரோ தொகுதியில் நின்று கனடா நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தேடுக்கப்பட்டார்.

ராதிகா சிற்பேசன்
ராதிகா சிற்பேசன்

2011 முதல் 2015 வரை பதவி வகித்த இவர், தனது பதவிக்காலத்தில் ஒருமுறை இலங்கை சென்றபோது, அங்கு தன்னை இலங்கை அதிகாரிகள் பின்தொடர்ந்ததாகவும், அங்கு தனக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவியதாகவும் கூறியதால், பரபரப்பு ஏற்பட்டது. இலங்கையின் போர்க்குற்றத்தை விசாரிக்க வலியுறுத்த கனடாவின் முக்கிய அரசியல்வாதிகளை ஒருங்கிணைக்க முயன்றார் ராதிகா. தற்போது இவர், பதவியில் இல்லையென்றாலும் சமூகப் பணிகளைத் தொடர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் மறைந்த எஸ்.ஆர்.நாதன்

எஸ்.ஆர்.நாதன் என்று அழைக்கப்படும் செல்லப்பன் ராமநாதன் சிங்கப்பூரில், ஒரு தமிழ்க் குடும்பத்தில் பிறந்தவர். 1954ஆம் ஆண்டு மலாயா பல்கலைகழகத்தில் சமூகவியல் படித்த இவர், சிங்கப்பூரின் பல உயரிய பதவிகளை வகித்தார். அமெரிக்காவுக்கான சிங்கப்பூரின் தூதராகவும் இருந்தார். 1999 முதல் ஆகஸ்ட் 2011 வரை 12 ஆண்டுகள் சிங்கப்பூர் ஜனாதிபதியாக இருந்துள்ளார். தொடர்ந்து இருமுறை ஜனாதிபதியாக இருந்த பெருமைக்குரியவர். 2016ஆம் ஆண்டு மரணமடைந்தார்.

எஸ்.ஆர்.நாதன்
எஸ்.ஆர்.நாதன்

இவர்களைப்போல உலகம் முழுவதும் இன்னும் பல நாடுகளில் தமிழர்கள் அதிகாரமிக்க பதவிகளிலும் அரசியலிலும் இருக்கின்றனர். தவிர, இந்தியர்களும் பொறுப்பான பதவிகளில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com