ரஷ்ய நாட்டின் வீதிகளில் நீலம் மற்றும் பச்சை நிறத்தில் உலாவும் தெரு நாய்கள்! காரணம் என்ன?
ரஷ்ய நாட்டின் வீதிகளில் நீலம் மற்றும் பச்சை வண்ணங்களில் தெரு நாய்கள் உலவி வருகின்றன. அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. முதலில் சில தெரு நாய்கள் நீல நிறத்தில் இருந்ததாகவும், பிறகு சில தெரு நாய்கள் பச்சை நிறத்துடன் சுற்றி வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இது அங்குள்ள தொழிற்சாலைகள் நிறைந்த தொழிற்பேட்டைகளில் உலவும் தெரு நாய்களுக்கு மட்டுமே நேர்ந்துள்ளதாக உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
முதலில் கடந்த பிப்ரவரி 11ஆம் தேதியன்று சுமார் ஏழு தெரு நாய்கள் நீல நிறத்தில் (Blue Coat) இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அது சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி இருந்தன. அந்நாட்டின் தலைநகர் மாஸ்க்கோவிலிருந்து 370 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள நிஷ்னி நொவ்ஹொரோட் (Nizhny Novgorod) பகுதியில் உள்ள தொழிற்சாலைகள் அதிகமுள்ள Dzerzhinsk நகரில் நிகழ்ந்துள்ளது. இது அங்கு இயங்கி வரும் கண்ணாடி தொழிற்சாலை ஒன்றில் நிகழ்ந்துள்ளதாக தெரிகிறது. அந்த தொழிற்சாலையிலிருந்த நீல நிற சாயத்தில் நாய்கள் விழுந்து புரண்டதால் இது நடந்திருக்கலாம் என கால்நடை மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர். நீல நிற தோலாக மாறியுள்ள நாய்கள் அனைத்தும் நலமுடன் இருப்பதாகவும், உணவு சாப்பிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதற்கு காரணம் ஏதேனும் ரசாயனமாக இருக்கலாம் என சந்தேகின்றனர் வாயில்லா பிராணிகளின் மீது பற்று கொண்டவர்கள்.
இது மட்டுமல்லாது மாஸ்க்கோவிலிருந்து 37 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள Podolsk பகுதியில் சில நாய்கள் பச்சை நிறத்தில் காட்சியளித்துள்ளன. இதற்கு காரணம் அங்கு மூடப்பட்டு கிடந்த பெயிண்ட் சேமிப்புக்கிடங்கில் இருந்த பச்சை வண்ணமே காரணம் என மாஸ்க்கோ பிராந்திய அமைச்சரவையில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் இது விஷமிகளின் வேலையாக இருக்கலாம் என உள்ளூர் ஊடகங்கள் சந்தேகிக்கின்றன.
Podolsk பகுதியில் பாதிக்கப்பட்ட நாய்களையும் கால்நடை மருத்துவர்கள் சோதித்துள்ளனர். இந்த நாய்களும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிலர் ரசாயன மாசு தான் இதற்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளனர்.
நன்றி : BBC