‘7 கண்டிஷன்கள்..’ ஹார்முஸ் விவகாரத்தில் அமெரிக்காவை மிரட்டும் ஈரான்.. அடுத்து என்ன?
ஜூன் மாத புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்கீழ் உள்ள ஏழு நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் வரை ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கும் என்று ஈரான் அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளது. அந்த நீர்வழியில் பாதுகாப்பை மீட்டெடுப்பதே தங்களின் உடனடி முன்னுரிமை என்று தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டால் அதை எதிர்கொள்ளவும் தயார் என எச்சரித்துள்ளது.
அணு ஆயுதம் தொடர்பாக அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நீடித்து வரும் நேரடித் தாக்குதல்கள் மத்திய கிழக்கில் நாளுக்கு நாள் பதற்றத்தை அதிகரித்து வருகின்றன. இதனால், சர்வதேச எண்ணெய் வர்த்தகத்திற்கு மிக முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) ஈரானின் கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளன. தவிர, அமெரிக்கக் கப்பல்கள் மற்றும் அதன் ராணுவத் தளங்கள் மீதான அச்சுறுத்தல்களும் அதிகரித்தன. இதற்கிடையே ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி அமைப்பினர் ஏமன் மற்றும் சவூதியைத் தாக்கி வருகின்றனர். இதற்கிடையே, போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ஈரான் அளித்த அமைதி முன்மொழிவுக்கு அமெரிக்கா தனது அதிகாரப்பூர்வ பதிலை அனுப்பியுள்ளது. எனினும், இறுதி அமைதி ஒப்பந்தம் இன்னும் எட்டப்படாததால், மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்த நிலையில், ஜூன் மாத புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்கீழ் உள்ள ஏழு நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் வரை ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கும் என்று ஈரான் அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளது. அந்த நீர்வழியில் பாதுகாப்பை மீட்டெடுப்பதே தங்களின் உடனடி முன்னுரிமை என்று தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், அணுஆயுத விவகாரத்தை நிராகரித்துள்ள ஈரான், “ராஜதந்திர செயல்முறையைத் தாமதப்படுத்தவோ அல்லது ஒருதலைப்பட்சமான கோரிக்கைகளைத் திணிக்க முயற்சிக்கவோ கூடாது. மேலும், மீண்டும் இராணுவத் தீர்வுகளை நோக்கி நகர்ந்தால், நாங்கள் முன்பைவிட அதிகத் தயார் நிலையில் இருக்கிறோம், மேலும் எங்களைத் தற்காத்துக்கொள்ளத் தேவையான எந்த நடவடிக்கையையும் எடுப்போம்” என எச்சரித்துள்ளது. முன்னதாக, நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால், ஏழு நாட்களுக்குள் ஹார்முஸ் நீர்வழிப்பாதை மீண்டும் திறக்கப்பட்டு இயல்பான கடல்வழிப் போக்குவரத்தை மீட்டெடுக்கலாம் என ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின்போது ஈரான் முன்வைத்திருந்தது. அந்த முன்மொழிவுக்கு அமெரிக்கா கடந்த வாரம் கத்தார் மத்தியஸ்தர்கள் மூலம் பதிலளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

