வாழ்த்து தெரிவித்த வாக்னர் படை.. போலந்துக்கு குறிவைக்க பெலாரஸில் தஞ்சமா? தற்போதைய சூழல் என்ன?

போலந்தையும் லிதுவேனியாவையும் பழிவாங்குவதற்காக, வாக்னர் படையை ரஷ்யா, பெலாரஸில் நிறுத்தியிருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
வாக்னர்
வாக்னர்ட்விட்டர்

ரஷ்ய அரசுக்கு எதிராக வாக்னர் குழு கிளர்ச்சி

ரஷ்ய அரசுக்கு எதிராக, அந்நாட்டு தனியார் ராணுவ கூலிப்படையான வாக்னர் குழு கடந்த ஜூன் மாதத்தில் திடீர் கிளர்ச்சியை உண்டாக்கியது. இதனால் ரஷ்யாவில் பதற்றம் ஏற்பட்டது. தலைநகர் மாஸ்கோ உட்பட பல்வேறு பகுதிகளில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர். பின் வாக்னர் குழுவினருக்கும், ரஷ்ய அரசுக்கும் சமரசம் ஏற்பட்டது. பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ முயற்சியில் நடந்த இந்த சமரசத்தில், வாக்னர் குழுத் தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஜினுக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டு, அவர் பெலாரஸ் செல்ல அனுமதிக்கப்பட்டார். அவரது வீரர்கள் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என ரஷ்யா அறிவித்தது. ப்ரிகோஜின் தனது வீரர்களை உக்ரைனில் உள்ள முகாம்களுக்கு திரும்ப உத்தரவிட்டார்.

புதின்,
புதின், PT web

கிளர்ச்சிக்குப் பிறகு புடின் - ப்ரிகோஜின் சந்திப்பு!

இந்த நிலையில், கிளர்ச்சி முடிவுக்கு வந்த சில நாட்கள் (ஜூன் 29ஆம் தேதி) கழித்து வாக்னர் குழுவின் தலைவர் ப்ரிகோஜினை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சந்தித்துப் பேசியதாகத் தகவல்கள் வெளிவந்தன. ரஷ்ய அரசும் இந்த சந்திப்பை உறுதிப்படுத்தியது. இந்த சந்திப்பில் இருவரும் என்ன பேசிக்கொண்டனர், சந்திப்பு எப்படி முடிவுக்கு வந்தது போன்ற விவரங்கள் எதுவும் தெரியவில்லை. அதேநேரத்தில், ப்ரிகோஜினும் அவரது ஆதரவளார்களும் விளாடிமிர் புடினைச் சந்தித்து அரசாங்கத்திற்கு விசுவாசமாக இருப்பதாக உறுதியளித்ததாக ரஷ்யா தெரிவித்திருந்தது.

சந்தேகத்தை ஏற்படுத்திய ப்ரிகோஜின் பெயர்!

இதற்கிடையே ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு, உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில், ’வாக்னர் கூலிப்படையினர் இனி உக்ரைனில் எந்தப் போர் நடவடிக்கைகளிலும் பங்கேற்க மாட்டார்கள். அவர்களை, நாங்கள் சமீபகாலமாக உக்ரைன் போரில் பார்க்க முடியவில்லை’ என பென்டகன் செய்தியாளர் பாட் ரைடர் தெரிவித்திருந்தார்.

வாக்னர் படை
வாக்னர் படைtwitter

இதனால், வாக்னர் படை வீரர்கள் எங்குள்ளனர், அவர்களின் அடுத்த திட்டம் எனப் பல கேள்விகள் எழுந்தன. என்றாலும் வாக்னர் கூலிப்படையினர் விவகாரத்தில் இன்னும் மர்மமே நீடிப்பதாக உலக நாடுகள் தெரிவித்துள்ளன.

வாக்னர்
வாக்னர் படை எங்கே? கேள்வி கேட்கும் உலக நாடுகள்!

இந்நிலையில் வாக்னர் குழுவின் தலைவர் ப்ரிகோஜின் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது கைது செய்யப்பட்டு ரகசிய இடத்தில் வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதற்கு பெலாரஸ் நாட்டு ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ சொன்ன பதிலும் ஒரு காரணம். அவர், “ப்ரிகோஜின் எங்கள் நாட்டில் இல்லை” எனத் தெரிவித்திருந்தார். இதுதான் உலக நாடுகளுக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

பெலாரஸில் முகாமிட்டிருக்கிறதா வாக்னர் குழு?

இதற்கிடையே ரஷ்ய நாட்டின் மூத்த அரசியல்வாதியும், முன்னாள் ராணுவ அதிகாரியுமான ஆண்ட்ரே கர்டபோலோவ் அளித்த பேட்டி ஒன்றில், “நேட்டோ படைகள் போலந்து, லிதுவேனியா எல்லைகளில் குவிக்கப்பட்டுள்ளன. ஒருவேளை உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ சார்பில் அங்கிருந்து தாக்குதல் நடைபெற்றால், அதனை எதிர்கொள்ளும் வகையில் வாக்னர் குழு பெலாரஸில் நிலைநிறுத்தப்பட்டிருக்கலாம். இந்த புதிய இடத்திலிருந்து (பெலாரஸ்) நேட்டோ படைகளை எதிர்கொள்ள வாக்னர் குழுவுக்கு ஒருசில மணி நேரம் போதும்.

பெலாரஸ்
பெலாரஸ்

பெலாரஸ் நாடு ஐரோப்பாவின் போலந்து, லிதுவேனியா, லாட்வியா மற்றும் உக்ரைனுடன் எல்லைகளை பகிர்ந்து கொள்கிறது. பெலாரஸ் ஒரு முக்கியமான மையமாக இருக்கிறது. எனவேதான் அங்கு வாக்னர் குழுவினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்" எனத் தெரிவித்திருந்தார்.

இந்த பேட்டியும் உலக நாடுகள் இடையே அச்சத்தையும் அதிர்வலைகளையும் உண்டாக்கியது. ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் நாள்முதல் வாக்னர் குழு முக்கியப் பங்காற்றிய சூழலில், திடீரென அந்தக் குழுவின் ஆதரவு இல்லாமல் போனதால் ரஷ்யாவின் பலம் குறைந்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. அவற்றை தடுக்கவே இவ்வாறாகச் சொல்லப்படுகிறது என்கிற கூற்றும் ஒருபக்கம் எழுகிறது.

அதேநேரத்தில், மறுபக்கம் வாக்னர் குழுவின் தகவலால் போலந்தும் லிதுவேனியாவும் பெலாரஸ் நாட்டுடனான அந்தந்த எல்லைகளை மூடுவது குறித்து பரிசீலித்து வருகின்றன.

எல்லைகளை மூடிய போலந்து, லிதுவேனியா

இதுகுறித்து லிதுவேனியா துணை உள்துறை அமைச்சர், “பெலாரஸ் நாட்டுடனான எல்லைகளை மூடும் முடிவுக்கு வந்துள்ளது உண்மைதான். எல்லையை மூடும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. தவிர, புலம்பெயர் அகதிகளில் சிலர் எங்கள் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் நிலையும் உருவாகலாம்” எனத் தெரிவித்துள்ளார். தவிர புலம்பெயரும் அகதிகள் என்ற பெயரில் வாக்னர் குழுவினர் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் நுழையும் வாய்ப்புகள் இருப்பதாக லிதுவேனியா நிர்வாகம் மேற்கத்திய நாடுகளை தொடர்ந்து எச்சரித்தும் வருகிறது.

வேலி அமைப்பு
வேலி அமைப்புட்விட்டர்

போலந்தின் ஆளும் கட்சித் தலைவரும் இதை உறுதிப்படுத்தியுள்ளார். அவர், “வாக்னர் கூலிப் படையினர் பெலாரஸ் நாட்டில் சுற்றுலாவுக்கு வரவில்லை. அவர்கள் அங்கே சிக்கலை உருவாக்குவார்கள். முதலில் போலந்துக்கு எதிராகவே அவர்களின் நடவடிக்கை இருக்கும். இதுபோன்ற சிக்கலை எதிர்கொள்ள போலந்து தயார் நிலையில் இருக்க வேண்டும்” என அவர் எச்சரித்துள்ளார்.

poland lithuania - belarus russia
poland lithuania - belarus russia

இதையடுத்து, போலந்து மற்றும் லிதுவேனியா ஆகிய இரண்டு நாடுகளும் தற்போது பெலாரஸ் மற்றும் ரஷ்யாவுடனான தங்கள் எல்லைகளில் வேலிகளை அமைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

வைரலான வாக்னர் குழுத் தலைவரின் ஆடியோ பேச்சு!

இதற்கிடையே, வாக்னர் குழுத் தலைவர் ப்ரிகோஜின், ஆடியோவில் பேசிய செய்தி ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அவர் “நைஜர் நாட்டின் ராணுவப் புரட்சிக்கு வாழ்த்துகள். அந்நாட்டின் படைகளுக்கு உதவி செய்ய போராளிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். நம்மை (வாக்னர்) பொறுத்தவரை இது நீண்டநாள் கழித்து கிடைக்கப்பட்ட விடுதலை. இனி போராளிகள் நாட்டை ஒழுங்காய்க் கட்டமைப்பர். நான் ஒருபோதும் ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராகச் செயல்படவில்லை” என ப்ரிகோஜின் தெரிவித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இந்த ஆடியோ மூலம் வாக்னர் குழுத் தலைவர் உயிரோடு இருப்பதாகவும், அவர் சுறுசுறுப்புடன் இயங்குவதாகவும் சொல்லப்படுகிறது. தற்போது போலந்து, லிதுவேனியா நாடுகள்தான் இவரை எச்சரித்துள்ளன என்பதால், இவருடைய அடுத்த இலக்கு அந்த நாடுகளாகக்கூட இருக்கலாம் என்றும், இதற்காக வாக்னர் குழுவினர் அகதிகள் மூலம் பெலாரஸுக்குச் சென்றிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. கிளர்ச்சிக்குப் பிறகு புடினைச் சந்தித்தபோது இருவரும் இதுகுறித்துப் பேசியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

பிரிகோஸின்
பிரிகோஸின்

வாக்னர் குழு போலந்து, லிதுவேனியா போன்ற நாடுகளைக் குறிவைத்திருப்பதற்குக் காரணம், அவை இரண்டும் நேட்டோவில் உறுப்பினர்களாக உள்ளன. தவிர, ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனுக்கும் உதவி செய்து வருகின்றன. மேலும், உக்ரைன் நேட்டோவில் இணைய ஆதரவு தெரிவித்துள்ளன. குறிப்பாக, கடந்த காலங்களில் போலந்து 4 ராணுவ டாங்கிகளை உக்ரைனுக்கு அனுப்பியிருந்தது. இந்த விஷயம் தெரிந்த ரஷ்யா, போலந்துக்கு கச்சா எண்ணெய் விநியோகத்தை நிறுத்தியது. இதேநோக்கில், போலந்தையும் லிதுவேனியாவையும் பழிவாங்குவதற்காக, வாக்னர் படையை ரஷ்யா, பெலாரஸில் நிறுத்தியிருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

வாக்னர் குழு என்பது யாது?

ரஷ்யாவுக்கு உதவும் வகையில் பணியமர்த்தப்பட்ட தனியார் ராணுவ ஒப்பந்ததாரர்களே வாக்னர் ஆயுதக் குழுவினர். சிரியாவிலும் ஆப்பிரிக்க நாடுகளிலும் செயல்பாட்டில் உள்ள இந்தக் குழு, போர்க் குற்றங்களிலும் மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டு வருவதாகத் தொடர் குற்றச்சாட்டுக்கும் ஆளானது. வாக்னர் குழு உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ராணுவத் தாக்குதலின்போது பயன்படுத்திக்கொள்ளப்பட்டது. குறிப்பாக, கிழக்கு உக்ரைனின் பக்முத் பகுதி கைப்பற்றப்பட்டதில் வாக்னர் குழுவின் செயல்பாடுகளுக்கு அதிபர் புடினே பாராட்டுகளைத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வாக்னர் குழுத் தலைவராக இருப்பவர்தான் யெவ்ஜெனி ப்ரிகோஜின். இவர் குழுவிலான ராணுவ அமைப்பு, உக்ரைனில் பல பகுதிகளைச் சேதப்படுத்தியதிலும் கைப்பற்றியதிலும் தூணாகச் செயல்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால், உக்ரைனில் போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, யெவ்ஜெனி ப்ரிகோஜின் உலக நாடுகளின் கவனத்தை பெற்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com