100 கி.மீ அசுர காற்று.. ஆஸ்டன் புயல் செய்யும் நாசம்.. கடும் கோபத்தில் இயற்கை!!
செய்தியாளர் - கார்த்திகேயன்
மற்ற நாடுகளை போல், இங்கிலாந்து நாட்டிலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பல்வேறு இயற்கை சீற்றங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. கோரெட்டி, இங்க்ரிட், சந்திரா, வேட் உள்ளிட்ட புயல்கள் இதுவரை பிரிட்டன் நாட்டை தாக்கி சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது ஆஸ்டன் என்ற புயல் தனது கொடூரத்தை நடத்தியுள்ளது. அதாவது, அட்லாண்டிக் பெருங்கடலில் ஒரு குறிப்பிட்ட கடல் பகுதியில், கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி உருவானதுதான் ஆஸ்டன் புயல். பின்னர் ஏற்பட்ட வளிமண்டல மாற்றங்களால், இது மிக வேகமாக வலுப்பெற்று, கடந்த வியாழக்கிழமை அன்று இங்கிலாந்து நாட்டின் தென்கிழக்கு பகுதிகளை கடுமையாக தாக்கியது.
இந்த குளிர்காலத்தின் முதல் பெயரிடப்பட்ட புயலான ஆஸ்டன், கென்ட், சர்ரே, சசெக்ஸ் ஆகிய பகுதிகளில், பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கனமழை பெய்து முக்கிய சாலைகளில், பெருமளவில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, இங்கிலாந்தின் பல்வேறு பகுதிகளில், பலத்த காற்று வீசுவதற்கான மஞ்சள் எச்சரிக்கையை அந்நாட்டு வானிலை மையம் விடுத்துள்ளது. கிட்டதட்ட காற்றின் வேகம் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. புயல் கரையை கடந்த பிறகும், இவ்வளவு வேகமாக காற்று வீசி வருவது, அந்த புயலின் தாக்கம் மையம் கொண்டபோது எப்படி இருந்திருக்கும் என்பதை எடுத்துக்காட்டுகிறது.
பல குழுக்களாக பிரிந்து மீட்பு பணி மும்மரமாக நடந்து வரும் நிலையில், கிழக்கு சசெக்ஸ் பகுதியின் பல்வேறு பகுதிகளில், மின்வெட்டு ஏற்பட்டு, மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையே, வானிலை எச்சரிக்கைகள் விரைவாக மாறக்கூடும் என்பதால், தயாராக இருங்கள் என்றும், அந்தந்தப் பகுதிக்கான வானிலை முன்னறிவிப்புகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள் என்றும், வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், இந்த புயல் இங்கிலாந்தை கடந்த பிறகு, ஐரோப்பிய கண்டத்தின் வடமேற்கு பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது. குறிப்பாக, இது வடக்கு பிரான்ஸ் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளை தாக்கும் என்று வானிலை நிபுணர்கள் கணிக்கின்றனர்.

