சீனாவை எதிரியாகக் கருதுவதை நிறுத்த வேண்டும்: சாம் பிட்ரோடா கருத்துக்கு பாஜக கடும் எதிர்ப்பு
சீனாவை எதிரியாகக் கருதுவதை இந்தியா நிறுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டுப் பிரிவுத்தலைவர் சாம் பிட்ரோடா கூறிய கருத்துக்கு பாஜக ”காங்கிரஸ் கட்சி, சீனா மீதான வெறித்தனமான மோகம் கொண்டுள்ளது " என்று கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
முன்னதாக, ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் இந்தியா தனது நிலத்தின் ஒரு பகுதியை சீனாவிடம் இழந்ததாகக் கூறியதை அடுத்து காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டுப் பிரிவுத்தலைவர் சாம் பிட்ரோடா இத்தகைய கருத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், சீனாவுடனான இந்தியாவின் அணுகுமுறை மோதலை ஏற்படுத்துவதாகவும், அந்த மனநிலை மாற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் சீனாவின் அச்சுறுத்தல்களைக் கட்டுப்படுத்த முடியுமா என்ற கேள்விக்கு,
"சீனாவின் அச்சுறுத்தல் எனக்குப் புரியவில்லை. அமெரிக்கா ஒரு எதிரியை வரையறுக்கும் போக்கைக் கொண்டிருப்பதால், இந்தப் பிரச்சினை பெரும்பாலும் மிகைப்படுத்தப்படுவதாக நான் நினைக்கிறேன். அனைத்து நாடுகளும் எதிர்கொள்ளாமல், ஒத்துழைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நான் நம்புகிறேன். நமது அணுகுமுறை ஆரம்பத்திலிருந்தே மோதலாக இருந்து வருகிறது, மேலும் இந்த அணுகுமுறை எதிரிகளை உருவாக்குகிறது, இது நாட்டிற்குள் ஆதரவைப் பெறுகிறது. இந்த மனநிலையை நாம் மாற்றி, முதல் நாளிலிருந்தே சீனா எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்," என்று அவர் பதிலளித்துள்ளார்.
இவரது இத்தகைய பதிலுக்கு, எதிர்விணையாற்றிய பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளாரான துஹின் சின்ஹா பேசுகையில்,
”நமது நிலத்தில் 40,000 சதுர கி.மீ. நிலத்தை சீனாவுக்கு விட்டுக்கொடுத்தவர்களுக்கு, டிராகனிடமிருந்து எந்த அச்சுறுத்தலும் இன்னும் தெரியவில்லை. ராகுல் காந்தி சீனாவைப் பார்த்து பிரமித்துப் போய், IMEEC அறிவிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்பு BRI-க்கு ஆதரவாக இருந்தார் என்பதில் ஆச்சரியமில்லை. சீனா மீதான காங்கிரஸ் கட்சியின் வெறித்தனமான மோகத்தின் மையக்கரு, 2008 காங்கிரஸ்-CCP புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மர்மமாக மறைக்கப்பட்டுள்ளது," என்று கூறினார்.