மறைந்த ஸ்டீபன் ஹாக்கிங்கின் வீல் சேர் சுமார் 3 கோடிக்கு ஏலம்!

மறைந்த ஸ்டீபன் ஹாக்கிங்கின் வீல் சேர் சுமார் 3 கோடிக்கு ஏலம்!
மறைந்த ஸ்டீபன் ஹாக்கிங்கின் வீல் சேர் சுமார் 3 கோடிக்கு ஏலம்!

மறைந்த இயற்பியல் ஆறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் பயன்படுத்திய வீல் சேர், சுமார் 3 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

உலகத்தின் சிறந்த அறிவியல் ஆராய்ச்சியாளர்களில் முக்கியமானவர் ஸ்டீபன் ஹாக்கிங். கோட்பாட்டு இயற்பியலாளர், எழுத்தாளர் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர் என பன்முக ஆளுமை கொண்டவர். இயற்பியல் ஆராய்ச்சிகளிலும், எழுத்துத்துறையிலும் அதீத ஈடுபாடு உடையவர். அண்டவியல் மற்றும் குவாண்டம் ஈர்ப்பு ஆகியன இவரது முக்கிய ஆய்வுத்துறைகள். இவர் தனது கடைசி புத்தகத்தில் ‘கடவுள் என்று யாரும் இல்லை' என பதிவு செய்துள்ளார்.

சிறுவயதிலேயே அமையோட்ரோபிக் லேட்டரல் ஸ்க்லெரோசிஸ் (Amyotrophic Lateral Sclerosis ALS) என்னும் நரம்பு நோயால் தாக்கப்பட்ட இவர், கை கால் இயக்கம் மற்றும் பேச்சு பாதிப்புகளுக்கு உள்ளானவர். இருந்தாலும் மூளையின் செயல்பாட்டைக் கொண்டு 50 ஆண்டுகளுக்கு மேலாக சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டே, பல சாதனைகளை புரிந்துள்ளார். கடந்த மார்ச் மாதம் இவர் காலமானார்.

இவர் பயன்படுத்திய பொருட்களை, நியூயார்க் நகரத்தில் உள்ள கிறிஸ்டி என்ற நிறுவனம் ஏலத்தில் விட்டது. இவரது அறிவியல் கோட்பாடுகள், கூற்றுகள், கையால் எழுதப்பட்ட ஆய்வறிக்கைகள் என மொத்தம் 22 பொருட்கள் ஏலத்தில் விடப்பட்டன.

அக்டோபர் 31 ஆம் தேதியில் இருந்து நவம்பர் 8 ஆம் தேதி வரை நடந்த இந்த ஏலத்தில், 1965 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் முனைவர் பட்டத்திற்காக, ஸ்டீபன் ஹாக்கிங்கால் சமர்பிக்கப்பட்ட அவரது கையொப்பத்துடன் இருக்கும் 117 பக்க தொகுப்பும் ஒன்று. இந்த ஏலம் நேற்றோடு முடிந்தது. இதில் அவரது முனைவர் பட்டத் தொகுப்பு 584,750 பவுண்டுக்கு ஏலம் போனது. இதன் இந்திய மதிப்பு, ஐந்து கோடியே ஐம்பத்தைந்து லட்சத்து 33 ஆயிரத்து 999 ரூபாய் ஆகும். 

அதோடு, தன் முக்கால்வாசி வாழ்நாளை கழித்த அவரது பிரத்யேக சக்கர நாற்காலி மூன்று லட்சம் பவுண்டுக்கு ஏலம் போனது. இதன் இந்திய மதிப்பு, சுமார் இரண்டு கோடியே 86 லட்சத்து 8 ஆயிரத்து 435 ரூபாய் ஆகும். இதை யார் ஏலத்தில் எடுத்தார்கள் என்ற விவரத்தை ஏல நிறுவனம் வெளியிட வில்லை.

ஏலத்தில் கிடைத்துள்ள இந்தத் தொகையை ஸ்டீபன் ஹாக்கிங் அறக்கட்டளை மற்றும் மோட்டார் நியூரோன் நோய் ஆராய்ச்சி சங்கத்துக்கு வழக்கப்படும் என ஏலத்தை நடத்திய கிறிஸ்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com