இலங்கை அரசு சார்பில் கொண்டாட்டப்பட்ட தீபாவளி: அதிபர் சிறிசேன பங்கேற்பு
இலங்கையில் அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அரசு இல்லத்தில் நடைபெற்ற தீபாவளி நிகழ்ச்சியில் அதிபர் சிறிசேனா, எதிர்க்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், அமைச்சர் சாமிநாதன் உள்பட எம்.பிக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். பட்டாசு வெடித்து அவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
நாளை மறுதினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு 2017 ஆம் ஆண்டு தேசிய தீபாவளி தின விழா, அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று மாலை இலங்கை பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அனைத்து இந்துக்களுக்கும் அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்கள். இந்த நிகழ்வில் எதிர்க்கட்சி தலைவரும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், இந்து சமய கலாச்சார அலுவல்கள் அமைச்சர் சுவாமிநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சமய பெரியார்கள் மற்றும் வெளிநாட்டுத் தூதுவர்கள் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.