இலங்கை நாடாளு மன்றத்தை அதிரடியாக முடக்கிய அதிபர் சிறிசேன
இலங்கையின் பிரதமராக முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சே நேற்று இரவு பதவியேற்றார். அதிபர் மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் இந்தப் பதவியேற்பு நடைபெற்றது. இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவின் இலங்கை சுதந்திர கட்சியின் கூட்டணியில் ரணில் விக்கிரம சிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி இடம்பெற்றிருந்தது. 2015 பொதுத் தேர்தலில் இந்தக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பெற்றது.
இந்தக் கூட்டணியில் சமீப காலமாக பிளவு ஏற்பட்டு வந்தது. கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலிலும் இரு கட்சிகளிடையே கடும் போட்டி நிலவியது. பிரதமர் ரணில் விக்கிரம சிங்கேவிற்கு எதிரான சிறிசேன ஆதரவாளர்கள் சிலர் கடந்த ஏப்ரல் மாதம் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு கொண்டு வந்தனர்.
இந்நிலையில், ரணில் விக்கிரம சிங்கே பிரதமர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு, ராஜபக்சே புதிய பிரதமராக பதவியேற்றார். ரணில் விக்கிரம சிங்கே தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இலங்கை சுதந்திர கட்சியின் கூட்டணி வாபஸ் பெற்றதை அடுத்து உடனடியாக இந்த அதிரடி அரசியல் மாற்றம் நடைபெற்றது. இந்நிலையில் மகிந்தா ராஜபக்சே பிரதமராக பொறுப்பேற்றது சட்டவிரோதமானது என்று இலங்கை அமைச்சர் மங்கள சமரவீரா கூறினார். மேலும் இது ஜனநாயகத்திற்கு எதிரான சதி என்று கடுமையாக சாடினார்.
இதனையடுத்து தம்மை பிரதமர் பதவியில் இருந்து நீக்கம் செய்யும் அதிகாரம் சிறிசேனவிற்குக் கிடையாது என ரணில் விக்கிரமசிங்கே கூறினார். இதுபற்றி அவர் பேசும்போது, தொடர்ந்து பிரதமராக தான் பதவியில் நீடிப்பதாகவும் ராஜபக்சேவிற்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தது சட்டவிரோதமானது என்றும் குறிப்பிட்டார். பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆதரவாளர்களுடன் ரணில் விக்கிரமசிங்கே தீவிர ஆலோசனை நடத்தினார்.
இலங்கை நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டுமென ரணில் கோரிக்கை விடுத்து வரும் இந்தச் சூழலில், இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை நவம்பர் 16 வரை முடக்கி வைத்துள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் இந்த நடைமுறை இன்று நண்பகல் 12 மணியில் இருந்து நடைமுறைக்கு வருவதாகவும் அறிவித்துள்ளார். இதனால் இலங்கை அரசியலில் பலத்த நெருக்கடி எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.