\
Anojan Sivarasa
Anojan Sivarasaani

முகநூல் பதிவுக்கு மரண தண்டனை... இறுதியில் விடுதலை! இலங்கைத் தமிழருக்கு சவுதியில் நடந்தது என்ன?

இஸ்லாமிய மதத்தையும் முகமது நபியையும் அவமதிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்தைப் பதிவிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர் நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
Published on: 

செய்தியாளர் - ராஜ்குமார். ர

இஸ்லாமிய மதத்தையும் முகமது நபியையும் அவமதிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்தைப் பதிவிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர் நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். அப்படி அவர் என்ன கருத்தைப் பதிவிட்டார்? அவருக்கு ஏன் மரண தண்டனை விதிக்கப்பட்டது? இந்த விவகாரத்தில் இதுவரை என்ன நடந்துள்ளது? விரிவாகப் பார்க்கலாம்...

Saudi Arabia executes couple over alleged mosque kiss, sparking debate
SOUDIREUTERS

இலங்கையைச் சேர்ந்த சிவராசா அனோஜன், வேலைக்காக கடந்த 2025-ம் ஆண்டு சவூதி அரேபியாவுக்குச் சென்றுள்ளார். இந்நிலையில், இலங்கையில் நடைபெற்ற ஒரு சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் ஏற்பட்ட விவாதத்தின்போது, முகமது நபி குறித்து தனது முகநூல் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்தைப் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்தக் கருத்து சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதை நீக்கியதுடன், பகிரங்கமாக மன்னிப்பும் கோரியிருந்தார்.

இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஜூலை மாதம் சவூதி அரேபிய காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டு மத உணர்வுகளுக்கு எதிரான கருத்தைப் பதிவிட்டதாக அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 30 லட்சம் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டது. இதன் இந்திய மதிப்பு சுமார் ரூ.7 கோடி என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால், இந்த தீர்ப்பை எதிர்த்த அரசு தரப்பு வழக்கறிஞர்கள், இஸ்லாமிய ஷரியா சட்டத்தின்கீழ் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, கடந்த செப்டம்பர் 17-ம் தேதி மேல்முறையீட்டு நீதிமன்றம் அனோஜனுக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பு இலங்கையில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியது.

இதற்கிடையே, அனோஜனை மீட்க அவரது குடும்பத்தினர் இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, இலங்கை அரசு சட்ட வல்லுநர்கள் அடங்கிய குழுவினர் சவூதி அரேபியாவுக்குச் சென்று சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதன் ஒரு பகுதியாக, சவூதி அரேபிய உச்ச நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதன் காரணமாக கடந்த அக்டோபர் மாதம் 13-ம் தேதி அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை சவூதி அரேபிய உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இருப்பினும், அவருக்கு எதிரான வழக்கு நடவடிக்கைகள் முழுமையாக முடிவுக்கு வரவில்லை.

இத்தகைய சூழலில், கடந்த நவம்பர் 9-ம் தேதி அனோஜன் மீதான வழக்கு நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டாம் என சவூதி அரேபிய அரசுத் தரப்பு வழக்கறிஞர் அலுவலகம் முடிவு செய்துள்ளது. இதன்மூலம், அவர் மீதான வழக்கு முழுமையாக முடிவுக்கு வந்ததுடன், ஏற்கெனவே விதிக்கப்பட்டிருந்த தண்டனைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவர் ஓரிரு வாரங்களில் இலங்கை திரும்புவார் என இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

srilanka
srilankareuters

ஒரே ஒரு முகநூல் பதிவால் மரண தண்டனை வரை சென்ற சிவராசா அனோஜனின் வழக்கு, இலங்கையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பிறகு அவர் முழுமையாக விடுதலை அடைந்திருப்பது கவனம் பெற்றுள்ளது.