செய்தியாளர்: ராஜ் குமார்
இலங்கையில் அரசியல் நெருக்கடி, பொருளாதார வீழ்ச்சிக்கு பிறகு நடைபெறும் அதிபர் தேர்தல் முக்கியமாக பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில் பொருளாதார வளர்ச்சி, புதிய வேலைவாய்ப்பு, வெளிநாடு முதலீடுகள் ஈர்க்க வேண்டிய கட்டாயத்தில் இலங்கை இருக்கிறது. இந்த நிலையில் அதிபர் தேர்தல் அரசியல் நடவடிக்கையை இந்தியா, சீனா நாடுகள் கூர்ந்து கவனிக்கின்றன.
கடந்த 15 ஆண்டுகளில் இலங்கை அரசுக்கு சீனா 12 பில்லியன் டாலர் கடனாக கொடுத்து இருக்கிறது. பொருளாதார நெருக்கடிக்கு பிறகும் பல உதவிகளை செய்து வருகிறது. துறைமுகங்கள் குத்தகைக்கு விடுதல், உளவு கப்பல், நீர்மூழ்கி கப்பல்களை நிறுத்துவது போன்ற நடவடிக்கைகள் இருக்கும் நிலையில், மேலும் பல திட்டங்களை நிறைவேற்றவும் சீனா விரும்பும் என்கிறார்கள் பொருளாதார ஆய்வாளர்கள்.
கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத வகையில், இலங்கையின் ஜி.டி.பி. 5.3 சதவீதத்தில் இருந்து 4.7 சதவீதமாக குறைந்துள்ளது. சுற்றுலா, மீன்பிடி, விலங்குகள் இனப்பெருக்கம், விவசாயம் என முன்னேற்றத்தில் இருந்ததிலும் சிக்கல் எழுந்த நிலையில் அண்டை நாடுகளின் உதவி அவசியமாகிறது. எனவே இதை மையமாக வைத்தே இந்தியா, சீனாவின் திட்டங்கள் இருக்கும் என பத்திரிகையாளர்கள் கூறுகிறார்கள்.
தற்போதைய நிலையில், அமுல் நிறுவனம் சார்பாக பால் உற்பத்தியை மேம்படுத்த திட்டமிடுவதில் இந்தியாவிற்கு எதிர்கால பலன் அளிக்கும் என்றும் பத்திரிகையாளர்கள் தெரிவிக்கிறார்கள். பொதுவாக இலங்கை அதிபர் தேர்தலில் சஜித் பிரேமதாசா வெற்றி பெற்றால் இந்தியாவிற்கும், அனுரா குமார திசாநாயக்க வெற்றி பெற்றால் சீனாவிற்கும் சாதகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.