“மூன்று நாட்களில் ஐஎஸ் தொடர்பில் உள்ளவர்கள் கைது” - அதிபர் சிறிசேன

“மூன்று நாட்களில் ஐஎஸ் தொடர்பில் உள்ளவர்கள் கைது” - அதிபர் சிறிசேன
“மூன்று நாட்களில் ஐஎஸ் தொடர்பில் உள்ளவர்கள் கைது” - அதிபர் சிறிசேன

இலங்கை வெடிகுண்டு தாக்குதல் விவகாரத்தில், ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருக்கும் அனைவரும் இன்னும் மூன்றே நாட்களில் கைது செய்யப்படுவார்கள் என்று அதிபர் மைத்ரிபால சிறிசேன சூளுரைத்துள்ளார்.

இலங்கையில் ஈஸ்டர் திருநாளன்று நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புகளை அடுத்து, நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விவாதிக்க பாராளுமன்ற அமர்வு கூட்டப்பட்டது. அதில் பேசிய அதிபர் சிறிசேன, தொடர் குண்டுவெடிப்புகளை அரங்கேற்றிய பயங்கரவாதிகளுக்கு சொந்தமான 13 வீடுகள், 41 வங்கிக் கணக்குகள் கண்டுபிடிக்கப் பட்டிருப்பதாகக் கூறினார். அவற்றை அரசுடைமையாக்கும் நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 

மேலும் இன்னும் மூன்றே நாள்களில் ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருக்கும் அனைவரையும் கைது செய்யப் போவதாக சிறிசேன தெரிவித்தார். தமிழீழ விடுதலைப் புலிகள் உருவாகிய காலத்தில் தமிழ் மக்களை சிங்கள சமுதாயம் சந்தேகக் கண்ணோட்டத்தோடு பார்த்ததால், தமிழர்கள் பலர் இயக்கத்திற்குள் ஈர்க்கப்பட்டதாக அவர் நினைவுகூர்ந்தார். தற்போது முஸ்லிம் மக்களை பிழையான கண்ணோட்டத்தோடு சிங்கள மக்கள் பார்ப்பது தவறானது என்றும், அவ்வாறான மனப்பாங்கை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் சிங்கள மக்களை அதிபர் சிறிசேன கேட்டுக் கொண்டார்.

இதனிடையே சுற்றுலா பயணிகளுக்கு விடுக்கப்பட்ட எச்‌சரிக்கையை திரும்பப் பெற வேண்டும் என இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கை தாக்குதலைத் தொடர்ந்து அங்கு செல்லும் தங்கள் நாட்டு சுற்றுலா பயணி‌ளுக்கு அமெரிக்கா, சீனா, பிரிட்டன், இந்தியா‌ ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com