போராட்டம் வலுத்ததால் கலவரப்பூமியான இலங்கை - பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகல்

போராட்டம் வலுத்ததால் கலவரப்பூமியான இலங்கை - பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகல்
போராட்டம் வலுத்ததால் கலவரப்பூமியான இலங்கை - பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகல்

இலங்கையில் போராட்டக்காரர்களின் எதிர்ப்பை அடுத்து, பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அவர், தனது ராஜினாமா கடிதத்தை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனாவால் சுற்றுலாத்துறை முடக்கம், பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால், இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதுடன், தட்டுப்பாடும் நிலவி வருகிறது. இதனால் அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் மகிந்த ராஜபக்சேவும் பதவி விலகக் கோரி, அந்நாட்டு மக்கள் கடந்த ஒரு மாத்திற்கும் மேலாக வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால் போராட்டத்தை ஒடுக்க அவசரநிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், இலங்கையில் கூடாரம் அமைத்து காலிமுகத் திடலில் போராடிய போராட்டக்காரர்கள் மீது, ராஜபக்சே ஆதரவாளர்கள் கட்டையால் தாக்குதல் நடத்தியதுடன், கூடாரங்களை அடித்து உடைத்து தீ வைத்து எரித்தனர். இரு தரப்பும் பயங்கரமாக மோதிக்கொண்டநிலையில், போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர்.

இந்த வன்முறை சம்பவத்தில பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அங்கு வன்முறை நிறைந்து காணப்படுவதால் கலவரப்பூமியாகி பதற்றம் நிலவுகிறது. இதுகுறித்து அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் மகிந்த ராஜபக்சே தங்களது ட்விட்டர் பக்கத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளதாவது, “அரசியல் நாகரீகத்தைப் பொருட்படுத்தாமல், சிலர் தூண்டிவிட்டு நடைபெறும் போராட்டங்களால் ஏற்படும் வன்முறை சம்பவங்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். வன்முறை தற்போதைய பிரச்சனைகளை தீர்க்காது. அனைத்து பொதுமக்களும் அமைதியாகவும், பொறுமையாகவும் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த நெருக்கடியை தீர்க்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்சே பதிவிட்டுள்ளதாவது, “இலங்கையில் உணர்ப்பூர்வமான சம்பவங்கள் அதிகமாக நடந்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில், நமது பொது மக்கள் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். வன்முறை சம்பவங்கள் வன்முறையைத் தூண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நாம் இருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு ஒரு பொருளாதார தீர்வு தேவை. அதை தீர்க்க இந்த நிர்வாகம் உறுதிப்பூண்டுள்ளது” இவ்வாறு தெரிவித்திருந்தார்.

மகிந்த ராஜபக்சேவின் ட்வீட்டை டேக் செய்த இலங்கையின் அணியின் முன்னாள் வீரர், ஜெயசூர்யா, “கோவில் மரங்களுக்கு வெளியே காலி முகத்திடலில் பட்டப்பகலில் அப்பாவி போராட்டக்காரர்கள் மீது இதுபோன்ற கட்டவிழ்த்து விடப்படும் தடியடி சம்பங்கள் நடக்கும் என நான் ஒருபோதும் நினைத்ததில்லை. ஊழல் அரசியல்வாதிகளுக்கு துணை நிற்காமல், இந்த நாட்டின் பொதுமக்களைப் பாதுகாக்கவே தாங்கள் வந்துள்ளோம் என்பதை காவல்துறை நினைவில் கொள்ள வேண்டும். இது ராஜபக்சேக்களின் முடிவுக்காலம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இலங்கையில் போரட்டம் தீவிரமடைந்துள்ளதையடுத்து, பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அவர், தனது ராஜினாமா கடிதத்தை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மகிந்த ராஜபக்சே ராஜினாமாவை தொடர்ந்து அமைச்சர்களும் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com