\
இலங்கை மனித உரிமைகள் மீறல் - ஐநா தீர்மானத்தை இந்தியா ஆதரிக்குமா? எதிர்க்குமா?

இலங்கை மனித உரிமைகள் மீறல் - ஐநா தீர்மானத்தை இந்தியா ஆதரிக்குமா? எதிர்க்குமா?

இலங்கை மனித உரிமைகள் மீறல் - ஐநா தீர்மானத்தை இந்தியா ஆதரிக்குமா? எதிர்க்குமா?
Published on

இலங்கையில் மனித உரிமை மீறல் தொடர்பாக ஐநாவில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், அதை இந்தியா ஆதரிக்குமா அல்லது எதிர்க்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இலங்கையில் மனித உரிமை மீறப்படுவதாக கண்டனம் தெரிவித்து இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி உள்ளிட்ட 6 நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை மன்றத்தில் கொண்டு வந்துள்ளன. இதன் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற உள்ளது. இலங்கை இறுதிக்கட்டப் போருக்கு பின் அந்நாட்டில் தமிழர் நடத்தப்படும் விதம் உள்ளிட்ட பிரச்னைகள் அடிப்படையில் இத்தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

மனித உரிமை மன்றத்தில் 47 நாடுகள் இடம் பெற்றுள்ள நிலையில் அதில் பாதிக்கு மேற்பட்ட அதாவது 24 நாடுகள் ஆதரிக்கும் பட்சத்தில் தீர்மானம் வெற்றிபெறும். சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், கியூபா போன்ற நாடுகளின் ஆதரவுடன் இத்தீர்மானம் தோற்கடிக்கப்படும் என்று இலங்கை கூறி வந்தது. இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களிடம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ஆதரவு கோரியிருந்தார். இந்நிலையில் இவ்விவகாரத்தில் மத்திய அரசு என்ன நிலைப்பாடு எடுக்கப்போகிறது, இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்குமா அல்லது எதிர்த்து வாக்களிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கிடையில் இலங்கை வெளியுறவுத் துறை செயலாளர் ஜெயந்த் கொலம்பகே, தங்களுக்கு இந்தியா ஆதரவளிக்கும் என உறுதியளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். எனினும் இவரது பேச்சு குறித்து இந்திய தரப்பில் எந்த எதிர்வினையும் வெளியாகவில்லை. எனினும் இலங்கையில் அதிகரித்து வரும் சீன ஆதிக்கம், சர்வதேச அரசியல் சூழல், உள்நாட்டு அரசியல் நிலவரம் என பல அம்சங்களை கருத்தில்கொண்டே இவ்விவகாரத்தில் இந்தியாவின் முடிவு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com