இலங்கை | மகிந்த ராஜபக்சே இளைய மகன் கைது - பின்னணி என்ன?
இலங்கையில், கடந்த 2022ஆம் ஆண்டு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, அது அப்போதைய அரசுக்கு எதிராக மிகப்பெரிய புரட்சியாக வெடித்தது. அந்தச் சமயத்தில், இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் ஹெலிகாப்டர் மூலம், இலங்கையை விட்டு தப்பியோடினர். அதேசமயத்தில் மகிந்த ராஜபக்சே பிரதமராக இருந்தார். அவரும் தனது பதவியை ராஜினாமா செய்தார். என்றாலும், கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்சேவின் குடும்பத்தினரில் பலர் போட்டியிடவில்லை. மகிந்த ராஜபக்சே மூத்த மகன் நமல் ராஜபக்சே போட்டியிட்டபோதும் பெருத்த தோல்வியடைந்தார்.
இந்த நிலையில், மஹிந்த ராஜபக்சேவின் இளைய மகன் யோஷித ராஜபக்சே இலங்கை குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் கடற்படை வீரரான இவர் மீது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் இருந்தது. புகார் தொடர்பாக இலங்கை குற்றப் புலனாய்வு அமைப்பு விசாரித்து வந்தது.
இந்த வழக்கில் சில வாரங்களுக்கு முன்பு யோஷித ராஜபக்சவுக்கு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். இந்நிலையில் விசாரணை முடிவடைந்த நிலையில், பணமோசடி சட்டத்தின்கீழ் தவறு செய்ததற்கான ஆதாரங்கள் உறுதியானதையடுத்து யோஷித ராஜபக்சே இன்று பெலியட்டா பகுதியில் சிஐடி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, தற்போதைய அதிபர் அனுரகுமார திசநாயக்கா கடந்த கால ஆட்சியில் ஊழலில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியிருந்தார். அதன்படி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாகவே யோஷித ராஜபக்சே இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் கைது நடவடிக்கைகள் மேலும் தொடரும் எனக் கூறப்படுகிறது.