“போராட்டக்காரர்களை ஒடுக்குங்கள்”.. உச்சக்கட்ட பதற்றத்தில் இலங்கை.. லேட்டஸ்ட் 5 தகவல்கள்!

“போராட்டக்காரர்களை ஒடுக்குங்கள்”.. உச்சக்கட்ட பதற்றத்தில் இலங்கை.. லேட்டஸ்ட் 5 தகவல்கள்!
“போராட்டக்காரர்களை ஒடுக்குங்கள்”.. உச்சக்கட்ட பதற்றத்தில் இலங்கை.. லேட்டஸ்ட் 5 தகவல்கள்!

இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச வெளியேறிய நிலையிலும் இலங்கை தலைநகர் கொழும்புவில் மக்களின் போராட்டம் நீடிக்கிறது. மீண்டும் கலவரம் வெடித்துள்ள நிலையில், அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை பொறுப்பு அதிபராக பதவியேற்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிறப்பித்துள்ளார். இதையடுத்து இன்று இலங்கையில் நிகழ்ந்த முக்கியமான டாப் 5 சம்பவங்கள் இதோ!

1. ரணில் விக்ரமசிங்கவும் பதவி விலகக் கோரி தொடரும் போராட்டம்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் பதவியில் இருந்து விலக வலியுறுத்தி ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தடுப்புகளை மீறிக்கொண்டு பிரதமர் அலுவலகம் அமைந்துள்ள வீதியில் திரண்டனர். இதனால், பாதுகாப்புப்படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி ஆர்ப்பாட்டக்காரர்களை கலைத்தனர்.

2. போராட்டத்தை ஒடுக்க ரணில் உத்தரவு:

போராட்டக்காரர்கள் பிரதமர் அலுவலகத்திற்குள் நுழைந்ததை அடுத்து, ரணில் விக்கிரமசிங்க போராட்டத்தை ஒடுக்க முப்படைகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார். “ஜனநாயகத்திற்கு எதிரான இந்த பாசிச அச்சுறுத்தலை நாம் நிறுத்த வேண்டும். அரச சொத்துக்கள் அழிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. ஜனாதிபதி அலுவலகம், ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லம் ஆகியவை முறையான காவலில் வைக்கப்பட வேண்டும். எனது அலுவலகத்தில் இருப்பவர்கள், தற்காலிக அதிபராக எனது பொறுப்புகளை நிறைவேற்றுவதைத் தடுக்க விரும்புகிறார்கள்.

நமது அரசியலமைப்பை கிழித்து எறிய விட முடியாது. பாசிஸ்டுகளை கைப்பற்ற அனுமதிக்க முடியாது. சில முக்கிய அரசியல்வாதிகளும் இந்த தீவிரவாதிகளுக்கு ஆதரவளிப்பதாக தெரிகிறது. அதனால்தான் நான் நாடு தழுவிய அவசரநிலை மற்றும் ஊரடங்கு உத்தரவை அறிவித்தேன், ”என்று தற்காலிக அதிபர் பதவிக்கு நியமிக்கப்பட்ட பின்னர் தனது முதல் தொலைக்காட்சி உரையில் ரனில் விக்கிரமசிங்க கூறினார்.

3. மாலத்தீவிலும் கோத்தபயாவுக்கு கடும் எதிர்ப்பு:

அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாலத்தீவில் வசிக்கும் இலங்கை நாட்டவர்கள் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. கோத்தபய ராஜபக்சவை இலங்கைக்கு திருப்பி அனுப்பக் கோரி, இலங்கை தேசியக் கொடி மற்றும் அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோட்டாபய ராஜபக்சவை மாலத்தீவில் அனுமதித்த அரசாங்கத்தின் முடிவு குறித்து மாலத்தீவு தேசிய கட்சி (MNP) "அதிருப்தியை" தெரிவித்ததுடன், அரசிடம் விளக்கம் கேட்டு ஒரு தீர்மானம் ஒன்றையும் முன்வைப்பதாக கூறியுள்ளது. இதனிடையே, கோட்டபய சிங்கப்பூரில் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

4. அரசுத் தொலைக்காட்சியைக் கைப்பற்றிய போராட்டக்காரர்கள்:

இலங்கை அரசு தொலைக்காட்சியான ரூபவாஹினி அலுவலகத்திற்குள் போராட்டக்காரர்கள் நுழைந்ததால், இன்று பிற்பகலில் தற்காலிகமாக அதன் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. அதன் பொறியியலாளர்கள் நேரடி மற்றும் பதிவு ஒளிபரப்புகளை இடைநிறுத்திய நிலையில் மீண்டும் வழக்கம் போல ஒளிபரப்பு சேவையை தொடங்கியுள்ளது ரூபவாஹினி.

5. போராட்டக்காரர்கள் அமைதி காக்க! - பாதுகாப்புப் படைத் தலைவர்

ஆர்ப்பாட்டக்காரர்களை அமைதி காக்குமாறு இலங்கை பாதுகாப்புப் படைத் தலைவர் சவேந்திர சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கையின் பாதுகாப்புப் படைகளின் நிர்வாகத்திற்கு ஆதரவளித்து நாட்டில் அமைதியைப் பேணுமாறு போராட்டக்காரர்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். விமானப்படைத் தலைவர் மற்றும் கடற்படைத் தலைவருடன் கூட்டாக செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய அவர் ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியாக இருக்குமாறும், சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் ஆயுதப்படைகளுக்கு ஆதரவளிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com