நீர்த்தேக்கங்களில் குறையும் தண்ணீர் இருப்பு... 10 மணி நேர மின்வெட்டு அபாயத்தில் இலங்கை
இலங்கையில் நீர்தேக்கங்களில் போதிய தண்ணீர் இருப்பு இல்லாததால், மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டு ஒட்டுமொத்தமாக இலங்கையே இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடுமையான பொருளாதார நெருக்கடி, வரலாறு காணாத அளவுக்கு விலையேற்றம் என தவித்துக்கொண்டு இருக்கும் இலங்கையில் அடுத்த பிரச்னையாக இருப்பது மின்வெட்டு. நிலக்கரி கையிருப்பு இல்லாததாலும், அதனை இறக்குமதி செய்ய போதிய பொருளாதார நிலை இல்லாததாலும், மின்வசதிக்கு அணைகளிலுள்ள நீர்மின் திட்டங்களையே சார்ந்துள்ளது அந்நாட்டு அரசு. அந்த வகையில் இலங்கையின் மின்சேவைக்கு பெரும் பங்களித்த நீர் தேக்கங்களில் ஒன்றான காசல்ரீ நீர்தேக்கத்திலும் தண்ணீர் இருப்பு அடியோடு குறைந்துள்ளது. பலநகரங்களுக்கு குடிநீருக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டதால், மின்சார உற்பத்திக்கு போதுமான அளவுக்கு தண்ணீர் இல்லாமல் குறைந்து வருவது அந்நாட்டு மின்துறை அதிகாரிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே இலங்கையில் தினமும் 6 மணி நேரம் மின்வெட்டு நிலவும் சூழலில், விரைவில் அது பத்து மணி நேரமாக அதிகரிக்கக்கூடும் என அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். தற்போதே பெரிய கட்டடங்கள், தேவாலயங்கள் உள்ளிட்டவைகளில் மின்சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மின்வெட்டு ஒருபுறம் இருக்க, விரைவில் தண்ணீரும் முழுமையாக தீர்ந்துவிடும் நிலை இருப்பதால், பெரும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.