புதிதாக உருவான தீவிர புயல்! 65 கி.மீ வேகத்தில் அசுர காற்று! ஆபத்து வளையத்தில் 20 நகரங்கள்!
2026 முதல் இயற்கை சீற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க பென்சில்வேனியாவில் புதிய தீவிர புயல் உருவாகி, ஹாரிஸ்பர்க், யார்க் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நகரங்கள் ஆபத்து வளையத்தில் உள்ளன. மணிக்கு 65 கி.மீ வேகத்தில் வீசும் புயல் காற்றுடன் கனமழை, திடீர் வெள்ளம், மரங்கள் முறிவு, வீடுகள் சேதம் ஏற்படும் அபாயம் குறித்து தேசிய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
செய்தியாளர் - கார்த்திகேயன்
2026-ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்து இயற்கை சீற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த 2 மாதங்களில் மட்டும், உலகின் பல்வேறு மூலைகளில் நிலநடுக்கங்கள், கனமழை, புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டு உள்ளன. இப்படியான சூழ்நிலையில், புதிய புயல் காற்று ஒன்று ஏற்பட்டு, 20-க்கும் மேற்பட்ட நகரங்களை பெரும் பாதிப்புக்கு ஆளாக்கியுள்ளது.
அதாவது, அமெரிக்காவின் தேசிய வானிலை மையம் ஒரு சிறப்பு வானிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள ஹாரிஸ்பர்க், யார்க் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த புயல் காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக ஏற்பட்ட கனமழையால், திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
இதனால், டாஃபின் , கம்பர்லேண்ட் , ஆடம்ஸ் , யார்க் மற்றும் லான்காஸ்டர் ஆகிய மாகாணங்களின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
இதுமட்டுமின்றி, ஹாரிஸ்பர்க், யார்க், காலோனியல் பார்க், லோயர் ஆலன், ஹனோவர், மெக்கானிக்ஸ்பர்க், மிடில்டவுன், கேம்ப் ஹில், நியூ கம்பர்லேண்ட், ரெட் லயன், எலிசபெத்டவுன், டல்லாஸ்டவுன், லிங்கில்ஸ்டவுன், எனோலா, ஸ்டீல்டன், லெமோய்ன், ஸ்ப்ரை, ப்ராக்ரஸ், ஹம்மல்ஸ்டவுன் மற்றும் வீகல்ஸ்டவுன் ஆகிய பகுதிகளில், அடுத்தடுத்து பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த இடியுடன் கூடிய புயல் காற்று, கனமழை காரணமாக ராட்சத மரங்கள் முறிந்து விழக்கூடும் என்றும், வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்படலாம் என்றும் எச்சரித்த வானிலை மையம், புயல் ஓயும் வரை பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
கனமழையால் சாலைகளில் மிக விரைவாக தண்ணீர் தேங்கி, வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்பதால், வெள்ளம் சூழ்ந்த சாலைகளில் வாகனங்களை ஓட்ட வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த புயலின் காரணமாக ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்பில்லை என்று கூறியிருப்பது, அப்பகுதி மக்களுக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

