24 மணி நேரத்தில் 738 பேர் கொரோனாவால் பலி : சீனாவை மிஞ்சிய ஸ்பெயின்
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 738 பேர் உயிரிழந்திருப்பது ஸ்பெயின் நாட்டினை நிலைகுலையச் செய்துள்ளது.
உலகில் வேகமாக பரவிக்கொண்டிருக்கும் கொடிய தொற்று நோயான கொரோனா வைரஸ் அனைத்து நாடுகளையும் பெரிதும் பாதித்துள்ளது. இதில் இத்தாலி பரிதாப நிலையை அடைந்துள்ளது. மோசமான நிலைக்கு சென்ற சீனா தற்போது மீண்டு வந்துள்ளது. இந்நிலையில் சீனாவை மிஞ்சிக்கொண்டு சோக நிலைக்கு ஸ்பெயின் நாடு சென்றுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஸ்பெயினில் 738 பேர் இறந்துள்ளனர். இன்று மட்டுமே 443 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இதன்மூலம் ஸ்பெயின் நாட்டில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,434 ஆக உயர்ந்திருக்கிறது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 47,000ஐ கடந்துள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் சீனாவை முந்திக்கொண்டு உலக அளவில் இரண்டாவது இடத்திற்கு ஸ்பெயின் நகர்ந்துள்ளது. கொரோனா இறப்பு எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தில் உள்ள சீனாவில் இதுவரை 3,287 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
6,800 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இத்தாலி முதல் இடத்தில் உள்ளது. இருப்பினும் ஸ்பெயினின் உயிரிழப்பு மற்றும் பாதிப்பு அதிகரிக்கும் வேகத்தை கணக்கிடும் போது, இத்தாலியை மிஞ்சலாம் என மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர். நேற்றிலிருந்து மட்டும் ஸ்பெயினில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 39,673 லிருந்து 47,610 ஆக உயர்ந்துள்ளது. அங்கு பல முதியவர்கள் கொரோனா பாதிப்பால் இறந்து வீட்டிற்குள்ளேயே இருந்ததாகவும், அவர்களின் உடலை கைப்பற்றி அப்புறப்படுத்தியதாகவும் ஸ்பெயின் ராணுவம் தெரிவித்துள்ளது.

