எலான் மஸ்க் நிறுவனம் தட்டித் தூக்கிய ரூ2000 கோடி ஒப்பந்தம்! இது ஒரு ஸ்பேஸ் ’மாஸ்’ அப்டேட்!

எலான் மஸ்க் நிறுவனம் தட்டித் தூக்கிய ரூ2000 கோடி ஒப்பந்தம்! இது ஒரு ஸ்பேஸ் ’மாஸ்’ அப்டேட்!
எலான் மஸ்க் நிறுவனம் தட்டித் தூக்கிய ரூ2000 கோடி ஒப்பந்தம்! இது ஒரு ஸ்பேஸ் ’மாஸ்’ அப்டேட்!

கருப்பொருள் மற்றும் அது தொடர்பான பல கேள்விக்கு பதில்களை கண்டறிவதற்காக அமைக்கப்படவுள்ள நான்சி கிரேஸ் ரோமன் ஸ்பேஸ் தொலைநோக்கியை விண்ணில் ஏவுவதற்கான 200 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தை எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

நான்சி கிரேஸ் ரோமன் ஸ்பேஸ் தொலைநோக்கி (NGRT) கருப்பொருள் மற்றும் டார்க் எனர்ஜி தொடர்பான கேள்விகளுக்கான பதில்களைக் கண்டறிய நாசாவால் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரபஞ்சத்தின் மொத்த ஆற்றல் உள்ளடக்கத்தில் 68% டார்க் எனர்ஜி இருப்பதாகவும் அது பிரபஞ்சத்தின் விரிவாக்கத்திற்கு வழிவகுக்கிறது என்றும் விஞ்ஞானிகள் ஊகிக்கின்றனர். இது தொடர்பான ஆய்வுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல ஏதுவாக இந்த தொலைநோக்கி வடிவமைக்கப்பட உள்ளது.

தொலைநோக்கியின் சிறப்பம்சங்கள்:

2.4 மீட்டர் விட்டம் மற்றும் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியின் முதன்மை கண்ணாடியின் அதே அளவு கொண்ட கண்ணாடியுடன் பொருத்தப்பட்ட இந்த தொலைநோக்கி, ஹப்பிள் தொலைநோக்கியின் அகச்சிவப்பு கருவியை விட 100 மடங்கு பரந்த பார்வையை கொண்டிருக்கும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது. இந்த தொலைநோக்கியின் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் இருக்கும் என்றும் மேலும் 5 ஆண்டுகளுக்கு தேவையை பொறுத்து பணி நீட்டிப்பு செய்யும் வகையில் உருவாக்கப்பட உள்ளது.

ஏன் இந்த பெயர்? யார் இவர்?

இந்த கருப்பொருள் ஆய்வு தொலைநோக்கிக்கு நான்சி கிரேஸ் ரோமன் ஸ்பேஸ் தொலைநோக்கி என்று நாசா பெயரிட்டுள்ளது. நான்சி கிரேஸ் ரோமன் ஒரு அமெரிக்க வானியலாளர். நட்சத்திர வகைப்பாடு மற்றும் இயக்கங்களுக்கு முக்கிய பங்களிப்பைச் செய்தவர் ஆவார். இவர்தான் நாசாவின் முதல் நிர்வாகி ஆவார். 1960 - 70 காலகட்டங்களின் நாசாவின் முதல் வானியல் தலைவராக பணியாற்றினார். அமெரிக்க சிவில் விண்வெளி திட்டத்தின் தொலைநோக்கு நிறுவனர்களில் இவரும் ஒருவர்.

1979 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றுவிட்டாலும் 1990 இல் ஏவப்பட்ட நாசாவின் ஹப்புள் தொலைநோக்கியின் உருவாக்கத்தில் மிக முக்கிய பங்காற்றியவர் என்பதால் இவர் “ஹப்புள் தொலைநோக்கியின் தாய்” என்று நாசாவால் கொண்டாடப்பட்டார். இத்தனை சிறப்புகளை பெற்றவர் நான்சி என்பதால் தனது அடுத்த தொலைநோக்கிக்கு அவர் பெயரை வைத்துள்ளது நாசா.

எலான் மஸ்க் வசம் சென்ற ஒப்பந்தம்:

எலோன் மஸ்க் தலைமையிலான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் நான்சி கிரேஸ் ரோமன் விண்வெளி தொலைநோக்கியை விண்ணில் ஏவுவதற்கான பல மில்லியன் டாலர் ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது. ஒப்பந்தத்தின் மதிப்பு ஏறக்குறைய 255 மில்லியன் அமெரிக்க டாலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். இதில் ஏவுதள சேவை மற்றும் பிற பணி தொடர்பான செலவுகள் அடங்கும். அப்படியென்றால் தொலைநோக்கியை உருவாக்க நாசா உத்தேசித்துள்ள செலவு தொகை எவ்வளவு தெரியுமா? 3.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள்! இந்திய மதிப்பில் 25 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்!

எப்போது விண்ணில் ஏவப்படும்?

2026 ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் உள்ள லாஞ்ச் காம்ப்ளக்ஸ் 39A பிரிவிலிருந்து ஸ்பேஸ் எக்ஸின் பால்கன் ஹெவி ராக்கெட்டில் உதவியுடன் தொலைநோக்கி விண்ணில் ஏவப்படும் என அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com