சீக்ரெட் ரகசியம்.. வெளியிட்ட அதிபர்.. உக்ரைனுக்கு எதிரியான தென் கொரியா!
உக்ரைன் போரில் ரஷ்யா சார்பாகப் பங்கேற்று, உக்ரைனியப் படையினரால் சிறைபிடிக்கப்பட்ட இரண்டு கைதிகளை, உக்ரைன் தென் கொரியாவிடம் ஒப்படைத்திருந்தது. இந்த விஷயத்தை, ஐ.நா. சபையில் உக்ரைன் தெரிவித்ததைத் தொடர்ந்து தற்போது விவகாரம் பூதாகரமாகியுள்ளது.
நேட்டோ நாடுகளில் இணையக்கூடாது என்பதற்காக உக்ரைன் மீது ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் போர் தொடுத்தது. அது 4 ஆண்டுகளைக் கடந்தும் இன்றுவரை நடைபெற்று வருகிறது. ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பிற்கு எதிராக உக்ரைனும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக வட கொரியா வீரர்கள் போருக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அதில் இருவர் உக்ரைன் ராணுவத்தினரால் சிறைபிடிக்கப்பட்டனர். அந்த இரண்டு கைதிகளையும் உக்ரைன் தென் கொரியாவிடம் ஒப்படைத்தது. இந்த நிலையில்தான் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் (UNGA) விவாத உரையின்போது, உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி, தென் கொரியாவிடம் ஒப்படைத்த அந்த கைதிகள் பற்றிய தகவலைப் பகிரங்கமாக அறிவித்தார்.
இந்த விவகாரம் மனிதநேய அடிப்படையிலும், கைதிகளின் பாதுகாப்பைக் கருதியும் முற்றிலும் ரகசியமாக வைக்கப்பட வேண்டும் என இருநாடுகளுக்கும் இடையே ஒப்புக்கொள்ளப்பட்டதாகத் தென் கொரியா தெரிவித்துள்ள நிலையில், உக்ரைன் அதிபரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, தென் கொரிய வெளியுறவு அமைச்சகம் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. மேலும், முன்னறிவிப்பின்றி இந்த ரகசியத்தை வெளிப்படுத்தியதற்காக உக்ரைன் அரசு அதிகாரப்பூர்வ விளக்கமும், பகிரங்க மன்னிப்பும் கேட்க வேண்டும் என தென் கொரிய அதிபர் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது. அதேநேரத்தில், தென் கொரியாவுடன் ரகசிய ஒப்பந்தம் எதுவும் செய்யப்படவில்லை என உக்ரைன் தரப்பு மறுத்துள்ளது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவில் விரிசல் மேலும் அதிகரித்துள்ளது. மேலும், தென் கொரியா உக்ரைனுக்குப் மறைமுகமாக உதவிகள் செய்து வந்த நிலையில், இந்த விவகாரம் தென் கொரியாவை சிக்கலுக்கு ஆளாக்கியுள்ளது.

