கிளர்ச்சியைத் தூண்டிய குற்றம் | தென் கொரியா முன்னாள் அதிபருக்கு ஆயுள் தண்டனை!
தென் கொரியாவின் அதிபராக இருந்த யூன் சுக் இயோல், கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி, நாட்டு மக்களிடம் உரையாற்றியபோது, அவசரநிலை ராணுவச் சட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்தார். இதுதொடர்பான வழக்கில், சியோல் நீதிமன்றம் அவருக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியுள்ளது
தென் கொரியாவின் அதிபராக இருந்த யூன் சுக் இயோல், கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி, நாட்டு மக்களிடம் உரையாற்றியபோது, அவசரநிலை ராணுவச் சட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு எழுந்தது. தொடர்ந்து அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் பதவிநீக்க தீர்மானத்தைக் கொண்டு வந்தன. இதையடுத்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். இதன்மூலம் கைது செய்யப்பட்ட முதல் தென் கொரிய அதிபர் ஆனார். எனினும், இதுதொடர்பான வழக்கு அந்நாட்டு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம், தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோலை பதவி நீக்கம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில், தென் கொரிய முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு கிளர்ச்சி மற்றும் அதிகார துஷ்பிரயோக குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் சியோல் நீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. நாடாளுமன்றத்தை முடக்க ராணுவம் மற்றும் காவல் துறையைப் பயன்படுத்தியதாகவும் கட்டுப்பாடற்ற அதிகாரத்தைப்பெற மேற்கொண்ட இம்முயற்சி நாட்டின் ஜனநாயகத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைந்தது என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. தென் கொரிய வரலாற்றில் பதவியில் இருக்கும்போதே கைது செய்யப்பட்ட முதல் அதிபரான இவருக்கு வழங்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பு, உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. எனினும், இரு தரப்பினரும் மேல்முறையீடு செய்தால், வழக்கு உச்ச நீதிமன்றத்திற்குச் செல்லும், அதாவது தீர்ப்பு இறுதி செய்யப்படுவதற்கு இன்னும் பல மாதங்கள் ஆகலாம் எனக் கூறப்படுகிறது. அதேநேரத்தில், இதனுடன் தொடர்புடைய முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் கிம் யோங்-ஹியுனுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

