தென் ஆப்பிரிக்காவில் இரண்டு புதிய வகை ஒமைக்ரான் திரிபுகள் கண்டுபிடிப்பு!
தென் ஆப்பிரிக்காவில் இரண்டு புதிய வகை ஒமைக்ரான் வைரஸின் திரிபுகளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனாவின் ஒமைக்ரான் வகை வைரஸால் ஏற்பட்ட பாதிப்பு தற்போது தான் முடிவடைந்துள்ளது. இந்த சூழலில், பிரிட்டன், தென் கொரியா ஆகிய நாடுகளில் ஒமைக்ரான் உருமாற்றம் அடைந்து எக்ஸ் இ என்ற புதிய வகை திரிபு வேகமாக பரவி வருகிறது. அதேபோல, சீனாவிலும் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது. இதனால் மீண்டும் கொரோனா அலை ஏற்படுமா என்ற அச்சம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் இரண்டு புதிய வகை ஒமைக்ரான் வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளன. தென் ஆப்பிரிக்காவில் கடந்த ஆண்டு கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வகை கொரோனா தொடர்ந்து மரபணு மாற்றம் அடைந்து வருகிறது. அந்த வகையில், தற்போது மரபணு மாற்றம் அடைந்த இரண்டு புதிய ஒமைக்ரான் வகை வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அவற்றுக்கு பிஏ.4 மற்றும் பிஏ.5 என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புதிய வைரஸ் வகைகள் தென் ஆப்பிரிக்காவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.