‘ஃபீல்ட் மாா்ஷல்’ | பாக். ராணுவ ஜெனரலுக்கு பதவி உயர்வு; தோல்விக்கு பரிசா? என குவியும் விமர்சனங்கள்!
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம் பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தது. இதற்கு, பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளில் ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை வீசியது. ஆனால், இந்திய ராணுவம் இடையிலேயே வழிமறித்து அழித்தது. தொடர்ந்து இருதரப்பிலும் தாக்குதல் அதிகரித்தது. எனினும், இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவம் பின்னடைவைச் சந்தித்தது. இதற்கிடையே அமெரிக்க தலையீட்டீன் பேரில் இரு நாடுகளுக்கு இடையிலான தாக்குதல் முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில், இந்தியாவுடனான மோதலில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு வெற்றிகரமாக தலைமை வகித்ததாகக் கூறி அந்நாட்டு ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் அசீம் முனீருக்கு ‘ஃபீல்ட் மாா்ஷல்’ என பதவி உயா்வு அளிக்கப்பட்டது. பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் தலைமையில் நடைபெற்ற பாகிஸ்தான் அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவெடுக்கப்பட்டது. பாகிஸ்தான் வரலாற்றில் இந்தப் பட்டம், வழங்கப்படுவது இது இரண்டாவது முறை ஆகும். முதன்முறையாக 1959ஆம் ஆண்டு முகமது அயூப் கானுக்கு வழங்கப்பட்டது.
மறுபுறம், பாகிஸ்தான் ராணுவம் தோல்வியடைந்த 10 நாட்களுக்குள், அந்நாட்டு ராணுவ தலைமைத் தளபதிக்கு ‘ஃபீல்ட் மாா்ஷல்’ பதவி உயர்வு வழங்கியிருப்பதை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். ”தன்னைத்தானே உயர்த்திக்கொள்கிறார்" எனக் குற்றஞ்சாட்டும் நெட்டிசன்கள், அவரது பதவி உயர்வுக்கான காரணம் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதற்காக, இந்தியாவுடனான மோதலின்போது பாகிஸ்தானின் சமீபத்திய இராணுவ பின்னடைவுகளையும் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர். முன்னதாக, ஜெனரல் அசிம் முனிரின் எரிச்சலூட்டும் மற்றும் அதிர்ச்சியூட்டும் வகுப்புவாத பேச்சு, மதரீதியாக தூண்டப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு அடித்தளமாகக் கருதப்படுகிறது.