
ரஷ்யாவில் காதலிக்கு தன்மீது இருக்கும் நம்பிக்கையை தெரிந்துகொள்ள காரின்மீது அவரைக் கட்டி ஓட்டிச்சென்றதை அவரது காதலன் வீடியோ எடுத்து பதிவிட்டிருப்பது சமூக ஊடகங்களில் வைரலானது. அவருக்கு போக்குவரத்து காவல்துறை அபராதம் விதித்திருக்கிறது.
சமூக ஊடகங்களில் கவனம் ஈர்க்க பலரும் பல சாகச வீடியோக்களை பதிவுசெய்து பதிவிட்டு வருகின்றனர். அதில் சில பாராட்டுக்களையும், பல விமர்சனங்களையும் பெறும். அந்த வகையில் ரஷ்ய நாட்டின் மாஸ்கோ நகரைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது காதலிக்கு தன்மீதிருக்கும் நம்பிக்கையை தெரிந்துகொள்ள காரின்மீது கைகள் கட்டப்பட்ட நிலையில் படுக்கவைத்து கார் ஓட்டிச்சென்று வீடியோ ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.
5 மில்லியன் ஃபாலோவர்களைக் கொண்ட அவர், 'trust test' என்று குறிப்பிட்டு இந்த வீடியோவை பகிர்ந்தது சமூக ஊடகங்களில் பலரின் கவனத்தையும் திருப்பியிருக்கிறது. அதில் காவல்துறையும் அடக்கம். இந்த வீடியோ பெரும்பாலும் பகிரப்பட்டு பிரபலமானதை அடுத்து, சாலை விதிகளை மீறியக் குற்றத்திற்காக போக்குவரத்து காவல்துறையினர் அந்த நபருக்கு 750 ருபெல் அபராதம் விதித்திருக்கின்றனர். மேலும், சிறுவர்களுக்கு இந்த செயல் ஒரு தவறான முன்னுதாரணமாக இருப்பதாக பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.