’தம்’ அடிக்கும் உர்ராங்குட்டான்: மிருகக்காட்சி சாலைக்கு வலுக்கிறது எதிர்ப்பு!
மிருகக் காட்சி சாலையில் உர்ராங்குட்டான் குரங்கு சிகரெட் பிடித்த விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவாவில் உள்ளது, பான்டுங் மிருகக் காட்சி சாலை. இங்கு ஏராளமான விலங்குகள் உள்ளன. தினமும் அதிகமான பார்வையாளர்கள் இங்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வந்த பார்வையாளர் ஒருவர், உர்ராங்குட்டான் இருக்கும் பகுதிக்குச் சென்றார். தான் பிடித்துக்கொண்டிருந்த சிகரெட்டின் பாதியை உர்ராங்குட்டானுக்கு அருகில் வீசினார். அதைக் கண்டதும், எடுத்து வாயில் வைத்து ஊதத் தொடங்கிவிட்டது. இதை அங்குள்ளவர்கள் சிலர் வீடியா எடுத்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இதையடுத்து இந்தோனேஷிய மிருகக் காட்சி சாலைக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. ’யாரோ ஒரு பார்வையாளர் தவறு செய்திருக்கிறார். அதை நிர்வாகம் கவனிக்கத் தவறியது வேதனையளிக்கிறது’ என்று பலர் கூறிவருகின்றனர்.
’இந்த மிருகக்காட்சி சாலையில் விலங்குகளுக்கு பாதுகாப்பு இல்லை. ஏற்கனவே யானை ஒன்று இறந்தது தொடர்பாக எழுந்த பிரச்னையில் இந்த மிருகக்காட்சி சாலை ஒரு வருடம் மூடப்பட்டிருந்தது. இங்கு விலங்குகள் சரியாகப் பராமரிக்கப்படுவதில்லை’ என்று சிலர் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி மிருகக்காட்சி சாலையின் செய்தி தொடர்பாளர் சுல்தான் ஷ்யாபி கூறும்போது, ‘இந்தச் சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். இதுபற்றி போலீசில் புகார் கூறப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று பார்வையாளர்களுக்கு அறுவுறுத்தப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.

