ஜிம்மில் தலைகீழாக மாட்டிக்கொண்ட பெண்.. கண நேரத்தில் கைகொடுத்த ஸ்மார்ட்வாட்ச்!
அதிகாலை 3 மணிக்கு ஜிம்மில் உடற்பயிற்சி செய்தபோது ஜிம் உபகரணம் ஒன்றில் மாட்டிக்கொண்ட பெண்ணுக்கு ஸ்மார்ட் வாட்ச் உதவியிருக்கிறது - எப்படி? பார்க்கலாம்.
அமெரிக்காவின் ஓகியோ மாகாணத்தைச் சேர்ந்தவர் கிறிஸ்டைன் ஃபால்டஸ். இவர் அதிகாலை 3 மணியளவில் பெரீயாவிலுள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது உபகரணம் ஒன்றில் தலைகீழாக மாட்டிக்கொண்டார். அவர் அதிலிருந்து தன்னை விடுவிக்க எவ்வளவோ முயற்சித்தும் அவரால் வெளியே வரமுடியவில்லை. அவருக்கு ஜிம்மில் தெரிந்த ஒரே நபரான ஜெசோன் என்பவரை அழைக்க முயன்றுள்ளார். ஆனால் அங்கு பாட்டு ஓடிக்கொண்டிருந்தாலும், நண்பர் வேறு ஒரு அறையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்ததாலும் அவரால் கிறிஸ்டைன் அழைப்பை கேட்கமுடியவில்லை.
தலைகீழாக மாட்டிக்கொண்டிருந்த கிறிஸ்டைனுக்கு தனது ஸ்மார்ட் வாட்ச் தவிர வேறு எதுவும் அப்போது உதவிக்கு இல்லை. தனது நிலையை சுதாரித்துக்கொண்ட கிறிஸ்டைன் உடனடியாக தனது ஸ்மார்ட் வாட்சிலிருந்து 911 என்ற காவல்துறை எண்ணை அழைத்துள்ளார். அங்குவந்த காவல்துறையினர் அவரை மீட்டுள்ளனர்.
இதுகுறித்து கிறிஸ்டைன் கூறுகையில், ‘’தலைகீழ் டிகம்ப்ரஷன் உபகரணத்தில் மாட்டிக்கொண்டேன். என்னால் மேலே எழுந்திருக்க முடியவில்லை. அப்போது ஜிம்மில் இன்னும் நிறையப்பேர் இருந்திருக்கலாம் என்று ஆசைப்பட்டேன். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. என்னால் ஜிம்மில் யாருடைய உதவியையும் பெற முடியவில்லை. அதனால் காவல்துறையை அழைக்கவேண்டியிருந்தது’’ என்று கூறியுள்ளார்.