சட்டவிரோத தங்கச் சுரங்கத்தில் வெடி விபத்து... சோதனையிட சென்ற 6 அதிகாரிகள் பலி
கொலம்பியா நாட்டில் சட்ட விரோதமாக இயங்கி வந்த தங்கச் சுரங்கத்தில் நிகழ்ந்த வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
கொலம்பியா நாட்டின் அண்டியோகியியா மாகாணத்தில் இயங்கிவந்த ஒரு தங்கச்சுரங்கம் சில காலத்திற்கு முன்பாக மூடப்பட்டது. மூடப்பட்ட சில சுரங்கங்களில் அரசின் முன் அனுமதி பெறாமல் சிலர் சட்டவிரோதமாக நுழைந்து தங்கத்தை வெட்டி எடுத்துச் செல்கின்றனர்.
அரசால் மூடப்பட்ட தங்கச் சுரங்கத்திற்கு அதன் ஒப்பந்த நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகள் அவ்வப்போது சோதனை நடத்த செல்வது வழக்கம். சோதனை செய்ய ஏழு அதிகாரிகள் அந்த சுரங்கத்திற்கு சென்ற போது அங்கு சிலர் திருட்டுத்தனமாக தங்கம் வெட்டி எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, அதிகாரிகளைப் பார்த்து அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்கள் திகைத்துப் போய் நின்றார்கள். அதேவேளையில், அந்த இடத்தில் பயங்கரமான குண்டு வெடித்து சிதறியது. குண்டு வெடிப்பில் சிக்கி, சோதனையிட சென்ற அதிகாரிகளில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 5 மாதங்களில் மட்டும் கொலம்பியாவில் உள்ள சுரங்கங்களில் நிகழ்ந்த 28 விபத்துக்களில் 23 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 33 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.