லண்டனில் அடையாளம் தெரியாத நபர்கள், அமிலம் போன்ற நச்சுத்தன்மை வாய்ந்த பொருளை வீசியதில் ஆறு பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஸ்ட்ராட்ஃபோர்டு மையம் அருகே, இரண்டு கும்பலுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஒரு கும்பலில் இருந்தவர்கள், நச்சுத் தன்மை வாய்ந்த பொருளை ஒரு கும்பல் மீது வீசினர். அது பட்டதும் அவர்கள் வலியால் துடித்தனர். அதில் ஒருவர், ‘இது ஆசிட் தாக்குதல். தோல் எரிகிறது’ என்று கத்தினார். காயமடைந்தவர்கள், தண்ணீரில் அந்த நச்சுப் பொருள் பட்ட இடத்தைக் கழுவினர். அப்போது அவர்களின் முகத்தில் காயம் இருந்தது தெரியவந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
அடுத்த நில நிமிடங்களில் ஆம்புலன்ஸ் அங்கு வந்தது. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்கள் உயிருக்கு ஆபத்தில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது அமில வீச்சாக இருக்கலாம் என்றும் ஆனால் தீவிரவாத தாக்குல் இல்லை என்றும் லண்டன் காவல்துறை தெரிவித்துள்ளது.