குட்டியைக் காப்பாற்றும் முயற்சியில் 6 யானைகள் அடுத்தடுத்து உயிரிழந்த பரிதாபம்!
தாய்லாந்தில் குட்டி யானையை காப்பாற்றச் சென்று 6 யானைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்தில் உள்ளது காவோ யாய் தேசிய பூங்கா (Khao Yai National Park). பெரும் காடான இங்கு யானைகள் உட்பட பல்வேறு விலங்குகள் ஏராளமாக உள்ளன. இங்கு தினமும் சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கும். அவர்கள் காரில் சென்று வன விலங்குகளை ரசித்து செல்வார்கள். இந்தப் பூங்காவிற்குள் ஹயூ நரோக் என்ற நீர்வீழ்ச்சி உள்ளது. பெரிய நீர்வீழ்ச்சியான இங்கும் சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.
இன்று அதிகாலை மூன்று மணியளவில், இந்த நீர்வீழ்ச்சியின் அருகில் இருந்து யானைகளின் பிளிறல் கேட்டது. காலை 6 மணியளவில் பூங்கா ஊழியர்கள் அருகில் சென்று பார்த்தனர். அப்போதுதான் யானை குட்டி ஒன்று நீர்வீழ்ச்சியின் கீழே மூழ்கிக் கிடப்பதும் மேலே அதைக் காப்பாற்ற வந்த இரண்டு யானைகள் களைத்து நிற்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து நீர்வீழ்ச்சியின் கீழே சென்று பார்த்தபோது மேலும் 5 யானைகள் உயிரிழந்து கிடந்ததைக் கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். யானைக் குட்டியை காப்பாற்றுவதற்காக வந்து, இந்த யானைகள் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்று பூங்கா ஊழியர்கள் தெரிவித்தனர். பின்னர் நீர்வீழ்ச்சிக்கு அருகே தவித்துக்கொண்டிருந்த 2 யானைகளை ஊழியர்கள் பத்திர மாக மீட்டு சிகிச்சை அளித்தனர். இந்த சம்பவத்தை அடுத்து பூங்கா மூடப்பட்டுள்ளது.
யானைக் குட்டியை காப்பாற்றுவதற்காகச் சென்று 6 யானைகள் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத் தியுள்ளது.