”என்னை இப்படிதான் நடத்துனாங்க” - ராஜினாமா கடிதத்தை கழிப்பறை டிஸ்யூ பேப்பரில் அனுப்பிய பெண் ஊழியர்!
நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பலரும், தங்களது ராஜினாமா கடிதத்தை இமெயிலில் அனுப்புவார்கள் அல்லது கடிதம் மூலம் சமர்பிப்பார்கள். ஆனால், சிங்கப்பூரைச் சேர்ந்த பெண் ஊழியர் ஒருவர்கள் கழிப்பறையில் பயன்படுத்தப்படும் டிஸ்யூ பேப்பரில் தனது ராஜினாமா கடிதத்தை எழுதிக் கொடுத்திருப்பது மற்றவர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. சிங்கப்பூரைச் சேர்ந்தவர், ஆஞ்சிலா யோஹ். இவர், நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், அந்த நிறுவனத்தின் மீதிருந்த அதிருப்தி காரணமாக தன் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்துள்ளார். இதற்காக அவர் கழிப்பறை டிஸ்யூ பேப்பரைப் பயன்படுத்தியுள்ளார். இதுதொடர்பான அந்த டிஸ்யூ பேப்பரில், "இந்த நிறுவனம் என்னை எப்படி நடத்தியது என்பதைச் சுட்டிக்காட்ட இப்படியொரு காகிதத்தில் ராஜினாமாவை எழுதுகிறேன்” என அதில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இதனை LinkedIn தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “அந்தக் குறிப்பு வெறும் வலியை ஏற்படுத்தவில்லை. பணியிட கலாசாரம் எவ்வளவு முக்கியமானது என்பதை ஒரு நீடித்த நினைவூட்டலாக விட்டுச் சென்றது. நிறுவனங்கள் ஊழியர்களை மரியாதையாக நடத்த வேண்டும். ஊழியரை சின்ன விஷயங்களுக்கு பாராட்டுவதால்கூட, வேலையில் பல மாற்றங்கள் நடக்கும். அவர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேற முடிவு செய்தாலும், மனக்கசப்புடன் அல்ல, நன்றியுணர்வுடன் வெளியேறுவார்கள். பாராட்டு என்பது தக்கவைப்புக்கான ஒரு கருவி மட்டுமல்ல. ஒரு நபர் எவ்வளவு மதிக்கப்படுகிறார் என்பதற்கான பிரதிபலிப்பாகும். அவர்கள் செய்யும் செயல்களுக்காக மட்டுமல்ல, அவர்கள் யார் என்பதற்காகவும். மக்கள் குறைத்து மதிப்பிடப்பட்டதாக உணர்ந்தால், சிந்திக்க வேண்டிய நேரம் இது. பாராட்டுதலில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இன்றே தொடங்குங்கள்" என்று அறிவுரை வழங்கி உள்ளார். அவருடைய இந்தப் பதிவுக்கு வழக்கம்போல் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. பயனர்கள் பலரும் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.