
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி சீக்கிய போலீஸ் அதிகாரி சுட்டுக்கொல்லப்பட்டார்.
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் பகுதியை சேர்ந்தவர் சந்தீப் சிங் தலிவால் (40). இந்திய வம்சாவளி சீக்கியரான இவர், காவல்துறையில் பணியாற்றி வந்தார். தாடி மற்றும் டர்பனும் அவர் ரோந்து செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார். டெக்சாஸின் முதல் சீக்கிய போலீஸ் அதிகாரியான இவர், சாலையில் சென்றுகொண்டிருந்த ஒரு காரை நிறுத்தி விசாரித்துக் கொண்டிருந்தார்.
அப்போது காரில் இருந்து வெளியே வந்த ஒருவர், போலீஸ் அதிகாரியின் பின்பக்கமாக நின்று சரமாரியாகச் சுட்டார். இதில் சந்தீப் சிங் ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்து அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து அங்கு வந்த போலீசார், சந்தீப் சிங்கை சுட்டுவிட்டு தப்பியோடியவரை மடக்கிப் பிடித்தனர். அவர் பெயர் ராபர்ட் (47) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்துள்ள போலீசார விசாரணை நடத்தி வருகின்றனர்.
சந்தீப் சிங் மறைவுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.