ஈரான் படகுகளை சுட டிரம்ப் அதிரடி உத்தரவு.. இனிமேல் என்ன நடக்கும்..?
மேற்கு ஆசியாவில் ஈரான்–அமெரிக்கா பதற்றம் ஹார்முஸ் நீரிணையில் கடல்வழிப் போர் அபாயமாக வெடிக்கிறது. உலக கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் 20% நடைபெறும் இந்தப் பகுதியில் கட்டுப்பாட்டுக்கான போட்டி தீவிரமடைந்து, எரிபொருள், உணவுப் பொருட்களின் விலை ஏற்கனவே உயர்ந்துள்ளது.
மேற்கு ஆசியாவில் நிலவும் ஈரான் - அமெரிக்கா இடையேயான இராணுவ மோதல், பெரும் அபாயங்களைக் கொண்ட ஒரு கடல்வழிப் போராக உருவெடுத்து வருகிறது. உலகின் 20 சதவிகிதம் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் நீரிணையில், அமெரிக்காவும் ஈரானும் தங்கள் கட்டுப்பாட்டை நிலைநாட்ட போட்டி போடுகிறது .
இந்த மோதலால் சர்வதேச சந்தையில் எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துவருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஏப்ரல் 22 அன்று ஹார்முஸ் நீரிணையில் இரண்டு சரக்குக் கப்பல்களை ஈரான் ராணுவம் அதிரடியாகச் சிறைப்பிடித்தது. பனாமா மற்றும் லைபீரியா நாட்டுக் கொடிகளுடன் பயணித்த இந்தக் கப்பல்கள், விதிகளை மீறியதாகக் கூறி ஆயுதம் ஏந்திய வீரர்கள் கப்பலுக்குள் நுழையும் காட்சிகள் ஈரான் அரசுத் தொலைக்காட்சியில் வெளியாகியது .
இதனைத் தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளைப் பதிக்கும் எந்தவொரு ஈரானியப் படகுகளையும் கண்டவுடன் சுட்டுக் கொல்லுமாறு அமெரிக்க இராணுவத்திற்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்..
மேலும், உலகளாவிய கப்பல் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்க உதவியுள்ள கண்ணிவெடிகளை அகற்றும் முயற்சிகளை அமெரிக்கா தீவிரப்படுத்தும் என்றும், நமது கண்ணிவெடி அகற்றும் கப்பல்கள் தற்போது ஜலசந்தியைச் சுத்தம் செய்து வருகின்றன அந்த நடவடிக்கை மும்மடங்கு வேகத்தில் தொடர வேண்டும் என்றும் டிரம்ப் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

