அதிபர் ட்ரம்ப் மீது பாலியல் புகார் : விசாரணை நடத்த வலியுறுத்தும் பெண்கள்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது பாலியல் புகார் தெரிவித்த மூன்று பெண்களும் இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
ஜெசிக்கா லீட்ஸ், சமந்தா ஹால்வே, ரசேல் குரூக்ஸ் என்ற அந்த மூன்று பெண்களும், நியூயார்க்கில் செய்தியாளர்களை சந்தித்து, ட்ரம்பால் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை விவரித்தனர். கடந்த 2006 ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அழகிப் போட்டியின்போது ட்ரம்ப் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக சமந்தா ஹால்வேவும், விமானத்தில் சென்றபோது அத்துமீறி நடந்து கொண்டதாக ஜெசிக்கா லீட்ஸும், ட்ரம்ப் அலுவலகத்தில் பணியாற்றியபோது லிப்டில் முத்தம் கொடுத்ததாக ரசேலும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர்.
ஆனால் அவர்கள் மூன்று பேரும் பொய்யான தகவல்களை அளித்திருப்பதாக வெள்ளை மாளிகை மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்தாண்டே இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த ட்ரம்ப், அவர்களிடம் வழக்கு தொடுக்குமாறு சபதம் விடுத்தார். ஆனால், இதுதொடர்பாக இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. அதே சமயம் இந்த குற்றச்சாட்டுகளுக்கு தார்மீக பொறுப்பேற்று அதிபர் ட்ரம்ப் பதவி விலக வேண்டும் என ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில் குற்றம்சாட்டியுள்ள பெண்கள் அதிபர் ட்ரம்ப் மீது நாடாளுமன்ற விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி தற்போது மீண்டும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.