94% நீர்ப்பரப்பு மாயம்.. கோர தாண்டவமாடும் காலநிலை மாற்றம்.. காணாமல் போகும் கிரீஸ் ஏரி!
செய்தியாளர் - ராஜ்குமார்.ர
கிரீஸ் நாட்டின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள Koroneia ஏரிதான் அது. காலநிலை மாற்றம், நீண்டகால வறட்சி மற்றும் விவசாயத்துக்காக அதிகளவில் நீர் எடுக்கப்படுவது என அடுத்தடுத்த காரணங்களால், இந்த ஏரி தற்போது வேகமாகச் சுருங்கி வருகிறது. ஒருகாலத்தில் கிரீஸின் முக்கியமான ஏரிகளில் ஒன்றாக இருந்த Koroneia, ஆயிரக்கணக்கான இடம்பெயரும் பறவைகளுக்கு வாழ்விடமாகவும் இருந்திருக்கிறது. குறிப்பாக, Flamingo உள்ளிட்ட நீர்ப்பறவைகள் இங்கு வந்து செல்வது வழக்கம். சுற்றுலா, மீன்பிடி மற்றும் விவசாயத்துக்கும் இந்த ஏரி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்துள்ளது. ஆனால்... கடந்த சில ஆண்டுகளில் இந்த ஏரியின் நிலை தலைகீழாக மாறியிருக்கிறது.
கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் தேசிய ஆய்வகத்தின் Meteo குழு வெளியிட்டுள்ள செயற்கைக்கோள் தரவுகளின்படி, 1984-ம் ஆண்டு Koroneia ஏரியின் நீர்ப்பரப்பு சுமார் 42.8 சதுர கிலோமீட்டராக இருந்துள்ளது. 2016-ம் ஆண்டில் 34.4 சதுர கிலோமீட்டராக இருந்த நீர்ப்பரப்பு, 2024-ல் 29.8 சதுர கிலோமீட்டராகவும், 2025-ல் 17.9 சதுர கிலோமீட்டராகவும் குறைந்துள்ளது. ஆனால்... 2026-ல் நிலைமை இன்னும் மோசமாகியுள்ளது. தற்போது ஏரியின் நீர்ப்பரப்பு வெறும் 2.7 சதுர கிலோமீட்டராக மட்டுமே இருப்பதாக செயற்கைக்கோள் தரவுகள் தெரிவிக்கின்றன. அதாவது, 1984-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, ஏரியின் நீர்ப்பரப்பில் சுமார் 94 சதவிகிதம் குறைந்துள்ளது.
ஒரு காலத்தில் தண்ணீர் நிரம்பியிருந்த இடங்கள், தற்போது வெடித்துக் காய்ந்த மண்பரப்பாக காட்சியளிக்கின்றன. ஆங்காங்கே எஞ்சியிருக்கும் நீர், சிறுசிறு சேறு நிறைந்த குளங்கள்போல காட்சியளிக்கிறது.
மழைப்பொழிவு குறைந்திருப்பதுதான் இதற்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது. இப்பகுதியின் ஆண்டு மழைப் பொழிவு சுமார் 400 மில்லிமீட்டராக குறைந்துள்ளது. மேலும், காலநிலை மாற்றத்தால் வெப்பநிலை உயர்வதால், நீர் ஆவியாகும் அளவும் அதிகரித்துள்ளது. இதனால் ஏரியில் இருக்கும் குறைந்த அளவிலான நீரும் வேகமாக குறைந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், மழைப்பொழிவு குறைந்ததால் விவசாயத்துக்குத் தேவையான தண்ணீரைப் பெற, ஏரி மற்றும் நிலத்தடி நீரில் இருந்து அதிகளவில் நீர் எடுக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவும் ஏரியின் நீர்மட்டம் மேலும் குறைவதற்கு காரணமாகியுள்ளது.
ஏற்கெனவே, காலநிலை மாற்றத்தால் மழைப்பொழிவில் ஏற்படும் மாற்றங்கள், அதிகரித்து வரும் வெப்பநிலை உள்ளிட்ட காரணங்களால் உலகின் பல்வேறு பகுதிகளும் பெரும் மாற்றங்களைச் சந்தித்து வருகின்றன. அந்த வரிசையில், Koroneia போன்ற நீர்நிலைகள் வேகமாகச் சுருங்கி வருவது, எதிர்காலம் குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது. இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் மனிதர்கள் இப்போதே முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்பதற்கான எச்சரிக்கையாகவும் இந்த மாற்றம் பார்க்கப்படுகிறது.
