‘இதுவரை1900 பேர் பலி’ - கொரோனோ வைரஸ் தாக்குதலின் 50ஆவது நாள்

‘இதுவரை1900 பேர் பலி’ - கொரோனோ வைரஸ் தாக்குதலின் 50ஆவது நாள்
‘இதுவரை1900 பேர் பலி’ - கொரோனோ வைரஸ் தாக்குதலின் 50ஆவது நாள்

உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸின் தாக்கம் வெளியுலகிற்கு தெரியவந்து இன்றுடன் 50 நாட்கள் ஆகின்றது. மேலும் ,சீனாவின் வுஹான் மாகாண மருத்துவமனையின் இயக்குநர் கொரோனா வைரஸால் உயிரிழந்திருப்பது பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீன மக்கள் புத்தாண்டைக் கொண்டாட தயாராகிக் கொண்டிருந்த தருணத்தில், ஹூபெய் மாகாண தலைநகரான வுகான் நகரில், நிமோனியா போன்ற காய்ச்சல் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்புக்கு சீன அதிகாரிகள் கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதியன்று எச்சரிக்கை விடுத்தனர். அன்று தொடங்கி சீனாவை ஆட்டிப்படைத்துவரும் கொரோனா வைரஸுக்கு இதுவரை ஆயிரத்து 868 க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர்.

சீனாவில் சுமார் 72 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சார்ஸ் போன்ற ஒரு வைரஸ் தாக்கம் சீனாவில் இருப்பதாக முதன்முறையாக அந்நாட்டு அரசை எச்சரித்த மருத்துவரே அதற்கு இரையாகிவிட்டார். கொரோனாவால் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் ஹூபெய் மாகாணத்தில் கடந்த ஜனவரி 23ஆம் தேதி முதல் பள்ளிகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.

சீனாவைத் தவிர்த்து, ஜப்பான், ஹாங்காங், பிலிப்பைன்ஸ், பிரான்ஸ், தைவான் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகளிலும் கொரோனா பரவியுள்ளது. அந்நாடுகளில் இந்நோய்க்கு 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சீனாவில் தீவிரமடைந்துவரும் கொரோனா வைரஸால் இதுவரை 1900 பேர் உயிரிழந்தனர். இதுவரை 72 ஆயிரம் பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவரும் ஆயிரத்து 716 மருத்துவப் பணியாளர்களும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை ஆறு மருத்துவப் பணியாளர்கள் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் வுஹானில் உள்ள வுச்சாங் மருத்துவமனையின் இயக்குனர் லியு ஜிமிங் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்‌ப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவமனையின் இயக்குநரே உயிரிழந்தது சீன மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com