ஹவுதிக்கு மாபெரும் வெற்றி.. கைப்பற்றப்பட்ட மயூன் தீவு.. துவம்சம் ஆன US-இன் ரகசிய தளம்!
ஏமன் - ஹவுதி இடையே மோதல், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் மத்திய கிழக்கின் முக்கியமான போர்களில் ஒன்றாகும். 2014-இல் ஹவுதிகள் ஏமன் தலைநகர் சனாவை கைப்பற்றியதைத் தொடர்ந்து உள்நாட்டுப் போர் தீவிரமடைந்தது. இதையடுத்து, ஹவுதிகளுக்கு எதிராகவும், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஏமன் அரசுக்கு ஆதரவாகவும் 2015-இல் சவூதி தலைமையிலான கூட்டணி ராணுவ நடவடிக்கையில் இறங்கியது.
பல ஆண்டுகள் நடைபெற்ற போருக்குப் பிறகு, 2022-இல் ஐ.நா. ஆதரவுடன் ஏற்பட்ட போர் நிறுத்தத்தால் எந்த அரசியல் தீர்வும் எட்டப்படவில்லை.
இதற்கிடையில், காஸா போர் தொடங்கிய பின்னர், ஹவுதிகள் செங்கடலில் வணிகக் கப்பல்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்தத் தொடங்கினர். இதனால் பாப் அல்-மண்டேப் நீரிணை மற்றும் செங்கடல் சர்வதேச கப்பல் போக்குவரத்தில் முக்கியப் பாதுகாப்புப் பிரச்னையாக மாறியது.
2026-இல் நிலைமை மீண்டும் தீவிரமடைந்து ஹவுதிகள்–சவூதி பதற்றம் அதிகரித்தது. ஏமன் போர் தற்போது உள்நாட்டுப் பிரச்னையைத் தாண்டி, முக்கியமான எண்ணெய் வர்த்தக வழியான பாப் அல்-மண்டேப், சவூதி பாதுகாப்பு, செங்கடல் கப்பல் போக்குவரத்து மற்றும் பிராந்திய அரசியலுடன் தொடர்புடைய சர்வதேச நெருக்கடியாக மாறியுள்ளது. குறிப்பாக, எண்ணெய் வளமிக்க இடங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள் ஹவுதிகள்.
இதனைத் தொடர்ந்து ஹவுதிகள் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் முன்னேறி, மயூன் தீவு மற்றும் பாப் அல்-மண்டேப் போன்ற முக்கிய இடங்களில் தங்கள் நிலையை வலுப்படுத்தியுள்ளனர். சவூதி அரேபியாவின் செங்கடல் கரையில் அமைந்துள்ள முக்கிய துறைமுக நகரமான யன்பு பகுதிகளை குறிவைத்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தி வந்தனர் ஹவுதிகள்.
மேலும் யன்புவில் உள்ள Saudi Aramco தொடர்பான எண்ணெய் உள்கட்டமைப்பு மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோன், சவூதி அரேபியாவின் யன்பு எண்ணெய் முனையத்தைப் பாதுகாக்க ராணுவ வீரர்கள், ரேடார் அமைப்புகள் மற்றும் வான் பாதுகாப்பு உபகரணங்களை அனுப்ப முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கை நேரடியாகப் போரில் ஈடுபடுவதற்காக அல்ல என்றும், முக்கிய எண்ணெய் உள்கட்டமைப்பைப் பாதுகாப்பதே நோக்கம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் மயூன் தீவில் இருக்கும் விமானத் தளத்தை ஹவுதிகள் கைப்பற்றியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பாப் அல்-மண்டேப் நீரிணையின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது இந்தத் தீவு. செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவை இணைக்கும் கடல்வழியைக் கண்காணிக்கும் முக்கியமான மயூன் தீவில் உள்ள விமானத் தளத்துக்குள் சென்றதாகக் கூறி காட்சிகளை வெளியிட்டுள்ளது ஹவுதிகளுடன் தொடர்புடைய Al-Masirah ஊடகம்.
இந்தத் தீவு முன்பு ஐக்கிய அரபு அமீரக ஆதரவு பெற்ற படைகளின் கட்டுப்பாட்டில் இருந்ததுடன், அங்கு விமானத் தளம் அமைக்கும் பணிகளும் நடைபெற்றிருந்தன. மேலும், பாப் அல்-மண்டேப் பகுதியில் ஒரு வெளிநாட்டு ராணுவ வசதி இருப்பதாக சில உளவுத்துறை மதிப்பீடுகள் மற்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அந்தத் தளத்தின் அடையாளம், சரியான இருப்பிடம் மற்றும் தற்போதைய செயல்பாட்டு நிலை ஆகியவை உறுதிப்படுத்தப்படவில்லை.
இதனால், மயூன் தீவை யார் கட்டுப்படுத்துகிறார்கள்? அங்கு இருக்கும் ராணுவ உள்கட்டமைப்பின் நிலை என்ன என்ற கேள்விகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. பாப் அல்-மண்டேப் என்பது சாதாரண கடல்வழி அல்ல. இது செங்கடலை ஏடன் வளைகுடாவுடன் இணைக்கிறது. அதன் வழியாகச் செல்லும் கப்பல்கள் பின்னர் சூயஸ் கால்வாய் வழியாக ஐரோப்பாவை அடைய முடியும்.
இதனால் இந்தப் பகுதியின் பாதுகாப்பு சர்வதேச வர்த்தகத்துக்கும் எரிசக்தி விநியோகத்துக்கும் முக்கியமானதாக உள்ளது. மயூன் தீவை ஹவுதிகள் கைப்பற்றியிருப்பது, அந்த நீர்வழியின் மீது அவர்களின் ராணுவ நிலையை மேலும் வலுப்படுத்தக்கூடும் என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளது.

